டெபிட் கார்டு எனும் பற்றட்டை அல்லது கிரெடிட் கார்டு எனும் கடன் அட்டை பயன்படுத்துபவரா நீங்கள்? உங்கள் அட்டையை உற்றுப் பாருங்கள், அதில் கீழ்காணும் ஏதாவது ஒரு குறியீடு இருக்கும். ரூபே(RuPay), வீசா(VISA), மாஸ்டர்கார்ட்(MasterCard), அமேரிக்கன் எக்ஸ்பிரஸ்(AmericanExpress), மேஸ்ட்ரோ(Maestro). இது என்ன என்று உங்களுக்கு தெரியுமா? அதை பற்றி அறிய மேலும் படிக்கவும்.
உங்கள் வங்கி கணக்கில் பணம் இருக்கிறது. நீங்கள் ஒரு கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குகிறீர்கள். கடைக்காரரிடமும் வங்கி கணக்கு இருக்கிறது. நீங்கள் உங்கள் அட்டையை மின் சாதனத்தில் தேய்த்தவுடன் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் கடைக்காரரின் வங்கி கணக்கிற்கு நொடிப்பொழுதில் செல்கிறது. நீங்கள் மேலே பார்த்த வீசா, மாஸ்டர்கார்ட் முதலிய பெயர்கள் அனைத்தும் நிதி நிறுவனங்கள். நீங்கள் உங்கள் அட்டை வழியாக மின் பண பரிவர்த்தனை செய்வதற்கு சில கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றன. இந்த நிதி நிறுவனங்கள் வங்கிகளுடன் சேர்ந்தோ தனியாகவோ அந்த கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கின்றன. அந்த வசதிகளை நிறுவியதற்காகவும், பராமரிப்பதற்காகவும் வங்கிகளிடம் கட்டணம் வசூலிக்கின்றன. அந்த கட்டணத்தை வங்கிகள் வாடிக்கையாளர்களான நம்மிடம் வசூல் செய்கின்றன. கடைக்கு பொருள் வாங்கச் செல்லும் நாம் அட்டைக்கு ஆண்டுக் கட்டணம் தொடங்கி வேறு சில கட்டணங்களும் செலுத்துகிறோம். கடைக்காரர் நீங்கள் செலுத்தும் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கட்டணமாக செலுத்துகிறார், ஆண்டு மற்றும் மாதக் கட்டணமும் உண்டு. சில கடைக்காரர்கள் அதையும் நம் தலையில் கட்டிவிடுவார்கள், சிலர் அதிலும் லாபம் பார்க்கத் துடிப்பார்கள். “கார்டுக்கு 2% எக்ஸ்ட்ரா!” என்பார்கள். இன்றைய காலகட்டங்களில் நம்மில் பெரும்பாலானோர் அட்டைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டோம். எந்த ஒரு வளர்ந்த பொருளாதாரத்திலும் அப்படித்தான்; மின் பண பரிவர்த்தனை அதிகமாக இருக்கும். அதிக அளவில் ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள் அச்சிட்டு, விநியோகித்து, பராமரித்து, பாதுகாப்பது வரை நிறைய நடைமுறை சிக்கல்கள் மற்றும் செலவுகள் இருக்கின்றன. சரி, நம் பயன்பாட்டினால் செலுத்தப்படும் கட்டணங்களும் அதன் வாயிலாக ஏற்படும் வருவாயும் எங்கே செல்கிறது?
ஒரே வார்த்தையில் பதில் சொல்வதானால், அமெரிக்கா. மேலே நீங்கள் பார்த்த நிறுவனங்களில் ரூபே தவிர அனைத்தும் அமெரிக்க நிறுவனங்கள். இந்த அமெரிக்க நிறுவனங்கள் நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ₹2000க்கும் ₹3-3.50 வரை கட்டணம் நிர்ணயம் செய்கின்றன. நீங்கள் ஏ.டீ.எம்மில் ₹2000 பணம் எடுத்தாலோ, கடையில் அட்டையை தேய்த்து பணம் செலுத்தினாலோ உங்கள் வங்கி இந்த அமெரிக்க நிறுவனங்களுக்கு ₹3-3.50 வரை கட்டணம் செலுத்துகின்றன. 2011 கணக்கெடுப்பின் படி இந்தியாவின் ஜனத்தொகை 120 கோடி. சராசரியாக ஒரு நபர் மாதம் ஒன்றிற்கு ₹10000 செலவு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம்; அதற்கு குறைந்த பட்சக் கட்டணம் ₹15. ₹15 விகிதம் ₹120 கோடி மக்களுக்கு ₹1800 கோடி, ஆண்டு ஒன்றிற்கு ₹21600 கோடி. 2011யை விட 2018யில் ஜனத்தொகை அதிகரித்துள்ளது, மக்களின் செலவழிக்கும் திறனும் அதிகரித்துள்ளது, இந்தியாவில் வாங்கிய அட்டைகள் வெளிநாடுகளில் பயன்படுத்தினால் கட்டணம் இன்னும் அதிகம். நடைமுறையில் ₹21600 கோடியை விட நாம் அதிக அளவில் வருமானத்தை அமெரிக்கா நாட்டிற்கு அளித்துவருகிறோம். இது தவிர நம் அனைவரின் தனிப்பட்ட மட்டும் பரிவர்த்தனை தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா அனுப்பிவைக்கப்படுகின்றன. அந்த தகவல்களைக் கொண்டு, யார் யார் எப்படி செலவு செய்கிறார்கள் என்பதை துல்லியமாக ஆராய்ந்து புதிய அமெரிக்க நிறுவனங்களும், பொருட்களும், சேவைகளும் இந்திய சந்தையில் வெற்றி நடை போடும். கடந்த பல வருடங்களாக இது தான் இங்கே நடந்து வருகிறது.
நேஷனல் பேமென்ட்ஸ் கார்பொரேஷன் ஆஃப் இந்தியாவால்(NPCI) அறிமுகம் செய்யப்பட்டது ரூபே. அமெரிக்க நிறுவனங்களை விட குறைவான கட்டணம் தான் ரூபேவில்; ₹2000க்கு ₹2.50. NPCI லாப நோக்கின்றி செயல்படும் ஒரு நிறுவனம்(Not-for-profit organisation). இந்திய நாட்டின் வங்கிகளும், இந்திய ரிசர்வ் வங்கியும் தான் இதை இயக்குகின்றன. இதன் நோக்கம் மின் பண பரிவர்த்தனை இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் கொண்டுசெல்ல வேண்டும் என்பது தான். 31 மே 2018 முதல் ரூபே அட்டைகள் சிங்கப்பூரிலும் ஏற்கப்படுகின்றன.
நீங்கள் சுதேசிய சிந்தனை உள்ளவர் என்றால், தயவு செய்து உங்கள் அமெரிக்கா நிறுவன அட்டையை துறந்துவிட்டு இந்தியாவின் ரூபேவிற்கு மாறுங்கள், பிறரையும் மாறச் செய்யுங்கள். நீங்கள் செய்யும் இந்த ஒரு செயலால், வெளிநாட்டிற்கு விரையமாக செல்லும் பல ஆயிரம் கோடிகள் பணம் தடுத்து நிறுத்தப்படும். மாறாக, அந்த பணம் நம் நாட்டிலேயே புழங்கும். தனி நபர்களுக்கும், இந்திய வங்கிகளுக்கும் செலவுகள் குறையும். இந்திய வங்கிகள் மற்றும் இந்திய அரசின் வருவாய் அதிகரிக்கும். உங்கள் தகவல் வெளிநாடுகளுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் செல்வது தவிர்க்கப்படும்.
இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்வோம், இந்திய பொருட்கள் மற்றும் சேவைகளையே பயன்படுத்துவோம். இந்தியாவை வல்லரசாக மாற்றுவோம்.