சிறுகதை – பங்குனிப் பொங்கல்

திருமணமான ஆண்கள் பெரும்பாலானோர் இதை கடந்திருக்கக் கூடும். மனைவியிடம் ஒரு விஷயத்தை பற்றி பேசினால் பிரச்சினை வரும் என்று தெரியும்; ஆனால் வேறு வழி இல்லாமல் பேசியே தீர வேண்டும். பேசிய பிறகு ஒரு பிரளயமே வரும்.

“அடுத்த வாரம் என்ன பிளான்?” என்று மெதுவாக ஆரம்பித்தேன் நான். காலையில் அலுவலகம் புறப்படும் போது இது போன்ற உரையாடலை தொடங்குவதில் சில சாதகங்கள் உள்ளன. பிரச்சினை வந்தால் சுலபமாக தப்பித்துவிடலாம்.
“என்ன பிளான்?”
“ஊருக்கு போறோமா?”
“எதுக்கு?”
“எதுக்கா? பங்குனி பொங்கல் வருதுல.”
“ஸ்கூல் இருக்கு, வேண்டாம்.”
“இது உனக்கே ஓவரா தெரியல? எல்.கே.ஜி. முடிச்சு யூ.கே.ஜி. போறான் அவன்!”
“யூ.கே.ஜினா என்ன? +2னா என்ன?”
“ரெண்டு நாள் மட்டும் லீவ் போடலாம். தேரோட்டம் அன்னிக்கு திரும்பிரலாம்.”
“டிக்கெட் கிடைக்காது.”
“பஸ்ல போகலாம்.”
“போன தடவ பஸ்ல போனது தம்பிக்கு சேரல.”
“அப்போ அவனுக்கு ஒரு வயசு! எல்லாம் பழகுனா…”
“இப்போ என்ன? ஊருக்கு போகணும் அவ்வளவுதான? வாங்க இன்னிக்கே போலாம். ஸ்கூல் முதல் நாளே லீவ் போட்ரலாம்.”

அவள் பிரம்மாஸ்திரத்தை கண்ணில் எடுத்தாள். ஆம், அவள் கண்ணீர் தான் பிரம்மாஸ்திரம். என் அஸ்திரங்கள் யாவும் தோற்றன. அவளையும் குற்றம் சொல்ல இயலாது. இந்நேரம் நாங்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் இருந்திருக்க வேண்டும்.

என் பெயர் சரவணன். சொந்த ஊர் விருதுநகர். நான் சென்னையில் ஒரு பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு புதிய ப்ராஜெக்டிற்காக இரண்டு ஆண்டுகள் அமெரிக்கா செல்ல என்னை தேர்வு செய்திருந்தனர். மொத்த குடும்பத்திற்கும் ஃபிளைட் டிக்கெட்கள் வந்துவிட்டன. என் மனைவியும் அவள் உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டத்தில் அமெரிக்கா செல்வதாக அறிவித்துவிட்டாள். இது தான் அவளுக்கு முதல் வெளிநாட்டுப் பயணம். பின்பு எதிர்பாராத சில காரணங்களினால் ப்ராஜெக்ட் கை நழுவிச் சென்றது. அமெரிக்க பயணம் ரத்தானது. திருமணத்திற்கு முன்பு சில ஆண்டுகள் நான் அமெரிக்காவில் வாழ்ந்துள்ளேன். எனக்கு அது புதிதல்ல. இன்னும் சொல்லப்போனால், அமெரிக்கா வேண்டாம் என்று தான் இந்தியா திரும்பினேன். அங்கிருந்த ஒரு சில வருடங்கள் பங்குனி பொங்கலுக்கும் வர முடியவில்லை தான். இப்பொழுது அமெரிக்கா செல்வோம் என்ற நம்பிக்கையில் சொந்த வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்தாகிவிட்டது. தற்காலிகமாக ஒரு சிறிய வாடகை வீட்டில் உள்ளோம். நான் ஆசையாக வாங்கிய முதல் காரை அடிமாட்டு விலைக்கு ஆன்லைனில் விற்றுவிட்டேன்; கார் மட்டும் அல்ல, சில வருடங்களில் சேகரித்த பல வீட்டு உபயோகப் பொருட்களும் கூட. என் மகன் படிக்கும் பள்ளியில் டீ.சீ. வாங்கிவிட்டேன். அது ஒரு பிரபலமான தனியார் பள்ளி. மீண்டும் பள்ளியில் சேர்க்கை பெரும் முன் போதும் போதும் என்றாகிவிட்டது. சரியாக அக்கினிச்சட்டி அன்று தான் பள்ளியின் முதல் வேலை நாள்.

மேலே பேச்சை வளர்க்காமல் அலுவலகம் கிளம்பினேன். அபார்ட்மெண்ட் லிஃப்ட் பழுதாகி இருந்தது. படியில் விறுவிறுவென இறங்கினேன். கீழே ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் போது தான் மதிய உணவு டப்பாவை மறந்தது ஞாபகம் வந்தது. மீண்டும் நாலு மாடி ஏறி இறங்க மனமில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்த போது போன் வந்தது.

“சொல்லு.”
“சாப்பாட மறந்துட்டீங்க. நான் எடுத்துட்டு கீழே வர்றேன்.”
“லிஃப்ட் இன்னும் சரியாகல. நீ அங்கயே இரு, நான் வர்றேன்.”
மூன்று மாடி ஏறுவதற்குள் மூச்சு வாங்கியது. என் மனைவி ஒரு மாடி கீழே வந்திருந்தாள். உணவு டப்பாவை கொடுத்துவிட்டு, “இந்த ஒரு வருஷம் பங்குனி பொங்கல் போக வேண்டாங்க. எல்லாரும் ஏதாவது கேப்பாங்க.” என்றாள். மூச்சு வாங்கியது, பதிலேதும் சொல்லாமல் டப்பாவை வாங்கிக்கொண்டு கீழே இறங்கத் துவங்கினேன்.

மீண்டும் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தேன். டிஸ்டிக்கிஃபோபியா என்ற ஒரு வகை மனநோய் எனக்கு. இந்த மனநோய் உள்ளவர்கள் எந்நேரமும் ‘விபத்து’ பற்றிய பயம் கொள்வர். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பல சிறந்த மனநல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் இது வரை பலனில்லை. இதை பற்றி என் குடும்பத்தில் யாரிடமும் நான் சொன்னதும் இல்லை. சில வருடங்களாக காரிலேயே பயணம் செய்தவன், இப்பொழுது ஸ்கூட்டரில் பயணம் செய்வதால் அதிக பயம் உள்ளது. நான் தினமும் பயன்படுத்தும் சென்னையின் ஓ.எம்.ஆர். சாலையில் வாரம் இரண்டு விபத்துக்களாவது பார்த்துவிடுவேன். இன்று உயிருடன் அலுவலகம் செல்வேனா என்ற சந்தேகம் எனக்கு அனுதினமும் உண்டு. இன்றும் அப்படித்தான். ஒரு வேளை இன்று நான் விபத்தில் இறந்துவிட்டால்? நான் கடைசியாக செய்த காரியம் என் மனைவியை மகிழ்ச்சியடைய செய்யவேண்டுமே தவிர, வருத்தப்பட அல்ல. போனை எடுத்து என் மனைவிக்கு ‘ஓகே, பங்குனி பொங்கல் வேண்டாம்.’ என்ற குறுஞ்செய்தியை வாட்ஸ்ஆப்பில் அனுப்பிவிட்டு கிளம்பினேன்.

நல்லபடியாக அலுவலகம் வந்து சேர்ந்துவிட்டேன். வழக்கம் போல் பொழுது ஓடியது. மதிய உணவை தனியாக அமர்ந்து முடித்துவிட்டு சிறிது தூரம் நடைப்பயிற்சி செல்வேன். இன்று வழக்கத்தை விட உணவு சுவையாக இருந்தது. நடைபோடும் போது யாருக்காவது போன் போடுவது வழக்கம். இன்று யாருக்காவது பிறந்த நாள் அல்லது திருமண நாள் இருக்கிறதா என்று ஃபேஸ்புக்கில் பார்த்தேன், யாருக்கும் இல்லை. ஆச்சிக்கு போன் போட்டேன். அவளுக்கு சரியாக காது கேட்காது, அதனால் மிகவும் சத்தமாகப் பேசுவாள்.

“அலோ, யாரு?”
“ஆச்சி, சரவணன் பேசுறேன்.”
“ராசா, நல்லா இருக்கியா? சாப்டியா? எப்போ யா பொங்கலுக்கு ஊருக்கு வார?”
ஆச்சிக்கு போன் போடாமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
“ஆப்பிஸ்ல கொஞ்சம் வேல ஜாஸ்தி ஆச்சி, இந்த வருசம் வர முடியுமான்னு தெரியல.”
“மாரியாத்தா மனசு வச்சா, நீ அமெரிக்கால இருந்தாலும் கூட்டிட்டு வந்திருவா!”
ஆச்சியை பொறுத்தவரை இந்தியாவில் இருந்து அதிக தொலைவில் உள்ள நாடு அமெரிக்கா தான். நான் அங்கிருந்த சமயம் பொங்கலுக்கு வராமல் இருந்தது ஆச்சிக்கு மிகவும் வருத்தம். பலரிடமும் பல முறை அவள் இதை ரகசியமாகச் சொன்னதை நானே என் காதுபட கேட்டிருக்கிறேன்.
“சாப்டீங்களா ஆச்சி? மாமா சாப்பிட்டாரா?” என்று பேச்சை மாற்றினேன்.
“எல்லாரும் விரதம் யா, மதியம் ஒரு வேள தான் சாப்பிடுறோம். இனிமேல் தான் சாப்பாடு.”
எண்பதைத் தாண்டிய ஆச்சி இன்னும் வருடந்தோறும் தவறாமல் விரதமிருக்கிறாள். நானும், என் மனைவியும் கூட விரதம் இருக்கிறோம். பன்னிரெண்டாம் வகுப்பில் துவங்கிய விரதம், எனக்கு இன்று வரை தொடர்கிறது. ஊருக்கு வரவில்லை என்றாலும் விரதம் நிச்சயம் உண்டு, அமெரிக்காவில் இருந்தாலும் சரி. ஆச்சியிடம் போனில் பேசும்பொழுதே அடுத்தடுத்து ரிமைண்டர்கள் வரத் துவங்கின.

அதற்குள் மணி எட்டாகிவிட்டது. அலுவலகத்தில் இருக்கும் வரை நாள், கிழமை, நேரம், காலம், மழை, வெயில், ஒன்றும் தெரிவதில்லை. முக்கிய வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. சில வேலைகளை நாளை பார்க்கலாம் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். போனை எடுத்துப் பார்த்தபொழுது இரண்டு மிஸ்டு கால்களும், வாட்ஸ்ஆப்பில் சில செய்திகளும் வந்திருந்தன. என் பள்ளிக்கால நண்பர்கள் வாட்ஸ்ஆப் குழுவில், ஒருவன் இந்த ஆண்டு பங்குனி பொங்கலில் அனைவரும் சந்திக்கலாம் என்று ஆரம்பித்தான். பலரும் அதற்கு ஆர்வமாக பதில் டைப் செய்துகொண்டிருந்தார்கள். நான் வராத ஆண்டு தான் இது போலெல்லாம் நடக்கும்.

பயந்துகொண்டே அலுவலகத்திலிருந்து மீண்டும் வீட்டிற்கு திரும்பினேன், இன்றைய நாள் விபத்துக்கள் இல்லாமல் இனிதே முடிந்தது. வீட்டிற்கு வந்ததும், என் மகன் ஓடி வந்து அணைத்துக்கொண்டான். கட்டிப்பிடி வைத்தியத்தின் மகத்துவம் நிச்சயம் உண்மை தான். அன்றைய நாளின் களைப்பு, கவலைகள் அனைத்தையும் பறந்தோடிவிடச் செய்யும் அந்த ஒரு அணைப்பு. விரதம் என்பதால் அணைப்பு மகனுடன் முடிந்துவிட்டது. அவனுடன் வெகு நேரம் விளையாடி எனக்கு பசியே எடுக்கத் தொடங்கியது. விரதமிருப்பதால் நான் சாப்பிடவில்லை; அவனை பெரிய போராட்டத்திற்குப் பிறகு ஒரு வழியாக சாப்பிட வைத்தாகிவிட்டது. பெரும்பாலும் நான் இரவு வீட்டிற்கு வரும் முன் அவன் தூங்கி விடுவான். ஒரு வேளை அவன் விழித்திருந்தால், நான் தான் கதை சொல்லி தூங்கவைக்க வேண்டும். அவனுக்கு பிடித்தது ஊர் கதைகள் தான், குறிப்பாக நாட்டார் தெய்வங்களின் கதைகள். கருப்பசாமி வில்லுப்பாட்டு, மாரியம்மன், வெயிலுகந்தம்மன் தொடங்கி எங்கள் குல தெய்வம் வரை பல கதைகள் நன்கு அறிவான். இன்று திருப்புகழ் சுவாமி கதை கேட்டான். கதையில் கட்டபொம்மன் அரசவைக்கு வரும் முன் தூங்கி விட்டான்.

என் மனைவி பக்கத்து அறையில் அமர்ந்து ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள். எங்களுக்கு சண்டை வரும்போது தான் புத்தகங்கள் மீதான அவளின் ஆர்வம் அதிகரிக்கும். என்ன பெரிய சண்டையாக இருந்தாலும் அது ஒரு நாளைக்கு மேல் தாக்குப்பிடிக்காது. அருகில் தூங்கும் என் மகனை ஒரு முறை பார்த்தேன். எந்த ஒரு கவலையும் இன்றி அழகாக தூங்கிக்கொண்டிருந்தான். அவன் என்னுடைய ஜெராக்ஸ் காப்பி. என்னை போலவே ஊர் பாசமும் கூட. பங்குனி பொங்கலுக்கு ஊருக்கு போக முடியவில்லையே என்று ஏக்கமாக இருந்தது. ஒவ்வொரு வருட பொங்கலிலும் நடந்த பல ஞாபகங்கள் வரத் தொடங்கின.

மூன்று வயது குழந்தையாக கரும்பு தொட்டிலில் கிடந்தது தான் என் வாழ்க்கையின் முதல் ஞாபகம். அய்யாவின் தோளில் அமர்ந்து திருவிழாவை வேடிக்கை பார்த்தது, பலூன் வாங்கியது, பொம்மை வாங்கி கோவிலில் வைத்தது, கண்மலர் செலுத்தியது, மாரியம்மன் கோவிலின் மலர் மற்றும் பழ தோரணங்களை பார்த்து வியந்தது, உண்டியலில் காசு போட்டது, மாவிளக்கை ருசித்து சாப்பிட்டது, மோர் பந்தல், கரும்புச் சாறு, பானக்காரம் வாங்கிக் குடித்தது, மொட்டையடித்து மாலையிட்டது, கரும்புள்ளி செம்புள்ளி வேஷம் போட்டது, அம்மா கோவிலில் மிகவும் சிரமப்பட்டு உருண்டு கொடுத்தது, பூச்சாண்டி வேடமிட்டவர்களை பார்த்து பயந்தது, பிரம்மாண்டமான மண்டகப்படிகளை கண்டு கழித்தது, மின் விளக்குகளில் மின்னும் தெப்பக்குளம், அதை விட பெரிய வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் கோவில் கோபுரம், தெருவெங்கும் சேறும் சகதியும், வேப்பிலை மஞ்சளின் வாசமும், மொத்த பஜாரின் வேனை பந்தலும், பொருட்காட்சியும், ராட்டினங்களும், மிளகாய் பஜ்ஜியும், டெல்லி அப்பளமும், கே.வி.எஸ். பள்ளி மைதானத்தில் ஜமுக்கால விரிப்பில் அமர்ந்து பார்க்கும் கலை நிகழ்ச்சிகளும், அக்கினி சட்டிகளும், 21 மற்றும் 51 சட்டிகள், ரதங்களை முந்திச் சென்று பார்ப்பது, அலகு குத்துவது, கயிறு குத்துவது, பறவை காவடிகள், சிறுவனாக சிறிய தேரை இழுத்தது, தேரோட்டத்தன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியது, கல்லூரியில் படிக்கும் போது நண்பன் அக்கினி சட்டியின் முன் தப்பட்டை அதிர கெட்ட ஆட்டம் போட்டது, அதை என் ஒன்று விட்ட அத்தை பார்த்து வீட்டில் போட்டுக்கொடுத்தது, என் அம்மா என்னை புரட்டி எடுத்தது, அடுத்த ஆண்டு அதே நாள் என் வருங்கால மனைவியை திருவிழாவில் பார்த்தது, மனதை பறிகொடுத்தது, அக்கா தங்கையுடன் திருட்டுத்தனமாக பெண் பார்த்தது, அம்மா அய்யாவுடன் அதிகார பூர்வமாக பொருட்காட்சியில் பெண் பார்த்தது, சித்திரையில் பூ வைத்தது, வைகாசியில் திருமணமானது, என் மகன் அடுத்த ஆண்டு சாற்றுத் தடையில் பிறந்தது, அவனுக்கு முகில் என்று பெயர் சூட்டியது, இந்த ஆண்டு பங்குனி பொங்கலுக்கு செல்ல முடியாததில் வந்து முடிந்தது என் ஞாபகங்கள். யோசித்து பார்த்தால், என் வாழ்க்கையும், ஊரும், பங்குனி பொங்கலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன.

ஊரில் அத்தனை உறவுகள், நண்பர்கள் இருந்தும், ஒவ்வொரு நாளும் என் மதிய உணவை தனியாகவே உண்கிறேன் இந்த சென்னை மாநகரில். என்னில் ஒரு பகுதியை நான் இழந்து விட்டேன் தான். மூன்று நாட்கள் திருவிழாவை பார்த்துவிட்டால், அடுத்த ஒரு வருடம் ஊரை பிரிந்து வாடும் எனக்கு அதை தாங்கும் சக்தி கிடைத்துவிடுகிறது. இந்த ஆண்டு அந்த மூன்று நாட்களுக்கும் வழியில்லாமல் போய்விட்டது. எப்படி இந்த பிரிவை தாங்கப் போகிறேன் என்று தெரியவில்லை. இவை அனைத்தையும் விட, நான் இழக்கும் இன்னொரு விஷயமும் உண்டு. எனது டிஸ்டிக்கிஃபோபியா விருதுநகரில் கால் வைத்ததும் காணாமல் போய்விடும். ஊரில் நான் அறியாத சந்து பொந்துகளே இல்லை. கல்லூரி நாட்களில், எனது யமஹா RX 100யில் இந்த நகர் சாலைகளில் பறந்து திரிந்துள்ளேன். என் இடத்தில் இருந்து நீங்கள் யோசித்து பாருங்கள். உங்களுக்கு ஒரு மன நோய் இருக்கிறது. நீங்கள் உலகமெங்கும் சுற்றி வரும் போதுதெல்லாம் அது உங்களை விடாது துரத்துகிறது. ஆனால் ஓரிடத்தில் மட்டும் உங்களைக் கண்டு அஞ்சியோடுகிறது. பயத்தை விடுப்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரின்பம்… சுதந்திரம்…

“என்னங்க, தூங்கிட்டிங்களா?” என் மனைவி மெதுவாக படுக்கை அறை கதவை திறந்தாள்.
‘கண்களை மூடி சுதந்திரத்தை உணரும் தருவாயில் மனைவியின் பிரவேசம். என்ன ஒரு முரண்!’
“இன்னும் இல்ல.”
முகில் கட்டிலின் நடுவில் தூங்கிக்கொண்டிருந்தான். நான் இடப்புறம். என் மனைவி மெதுவாக வலப்புறத்தில் அமர்ந்தாள்.
“சாரிங்க, என்னால தான இந்த வருஷம் ஊருக்கு போக முடியல.”
“ச்ச ச்ச, அப்படிலாம் இல்ல.”
“ஊர்ல யாருகிட்டயாவது பேசுனீங்களா?”
“ஆச்சி கிட்ட தான் பேசுனேன், எப்ப ஊருக்கு வரோம்னு தான் மொத கேள்வி கேக்குறாங்க! மனசே சரியில்ல…”
போன் வந்தது. என் அம்மா தான் அழைத்தாள். எனக்கு பேச மனமில்லை. என் மனைவியை பேசச் சொன்னேன். நான் தூங்கி விட்டதாக அம்மாவிடம் சொல்லும்படி சொன்னேன்.
“அத்தை.”
ஒரு வார்த்தை மட்டும் பேசிவிட்டு நீண்ட நேரம் ‘உம்’ கொட்டிக்கொண்டே இருந்தாள். பேச பேச அவள் முகம் மாறியது. மனதிற்கு ஏதோ தவறாகப்பட்டது.
“ஒரு நிமிஷம் அத்தை, அவருகிட்ட போன தர்றேன்.”
“உங்க ஆச்சிக்கு உடம்புக்கு முடியலையாம், மதுரையில் ஆஸ்பத்திரில சேத்துருக்காங்க. கொஞ்சம் சீரியஸ்ஸாம்.” என்றாள்.
“நாங்க உடனே ஊருக்கு கிளம்புறோம்மா. பஸ்ல ஏறிட்டு போன் போடுறேன்.” என்று அம்மாவிடம் சுருக்குமாக பேசிவிட்டு போனை அணைத்தேன்.

மறுநாள் காலை நானும் அய்யாவும் மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். ஆச்சியின் நிலைமை சிறிது கவலைக்கிடமாக இருப்பதாகச் சொன்னார் அந்த பிரபல மருத்துவர். ஆச்சி தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால், ஐந்து நிமிடங்கள் மட்டும் யாராவது ஒருவரை பார்க்க அனுமதித்தனர். தலைக்கு மற்றும் கால்களுக்கு கவசம் அணிந்து தான் உள்ளே பார்வையாளர்களை அனுமதிக்கின்றனர்; நோய் தொற்று ஏற்படாமல் இருக்க. நான் தான் அன்று அவளை தீவிர சிகிச்சை பிரிவில் சென்று பார்த்தேன். கண்களை மூடியபடி படுத்திருந்தாள். அதிகாலை மாரியம்மன் கோவிலில் பெற்ற திருநீறை அவள் நெற்றியில் இட்டேன். ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க, சுருக்கங்கள் நிறைந்த மறுகையை லேசாகப் பிடித்தேன். என் கையருகே ஆச்சியின் கை மிகவும் சிறிதாக தெரிந்தது. திடீரென்று ஒரு பழைய புகைப்படம் என் கண்முன்னே வந்து நின்றது. அதில் முப்பது நாள் குழந்தையாக, கயிறு கட்டும் நிகழ்ச்சியில் நான் ஆச்சியின் கையில் இருப்பேன். அன்று ஒரு தங்க அரைஞாணை அவள் என் இடுப்பில் கட்டிவிட்டிருந்தாள். அதே அரைஞாணைத் தான் இப்பொழுது என் கழுத்தில் சங்கிலியாக அணிந்திருக்கிறேன். கயிறு கட்டும் நாளன்று, வீட்டில் பெரியவர் யாராவது குழந்தையின் நாக்கில் தேன் அல்லது சக்கரை பாகை தொட்டு வைப்பர். யார் வைக்கிறார்களோ அவர்களை போலவே அந்த குழந்தையின் குணாதியசங்கள் இருக்கும் என்றொரு நம்பிக்கை. ஆச்சி தான் எனக்கு தேன் தொட்டு வைத்தாள். காலம் எப்படி வேகமாக ஓடுகிறது. அன்று அவள் கையில் குழந்தையாக நான் இருந்தேன். இன்று ஒரு குழந்தையின் கையை போல அவள் கை என் கைகளில். என்னையும் அறியாமல் கண்கள் குளமாகின. அறையை விட்டு வெளியேறினேன்.

ஆறு நாட்கள் உருண்டோடின. ஞாயிற்றுக்கிழமை. பங்குனிப் பொங்கல். ஆச்சி தான் பொங்க வைத்தாள். பொங்கல் பொங்கியதும் அசத்தலாக குலவை போட்டாள். ஆச்சியை போல குலவை போட எங்கள் ஜில்லாவிலே யாரும் இல்லை. எந்த ஒரு வருட பொங்கலிலும் இப்படி மகிழ்ச்சி பொங்கியது இல்லை. ஆச்சி மிகத் தெளிவாக சொல்லிவிட்டாள். எனது தம்பி ஒருவன் இருக்கிறான்; அவன் தான் ஆச்சியின் கடைசி பேரன்; செல்லப் பேரனும் கூட. அவன் திருமணத்தை பார்க்காமல் எங்கேயும் செல்லமாட்டாள் என்று.

மறுநாள் பஞ்சு மிட்டாய் சாப்பிட்டுக்கொண்டே அக்கினி சட்டிகளை வேடிக்கை பார்த்தபடி நானும், என் மனைவியும் பஜாரில் நடந்து சென்றோம். என் மகன் என் தோள்களில் அமர்ந்தபடியே சிறப்பாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்களில் கலர் கண்ணாடி, ஒரு கையில் வாட்சு மிட்டாய், மறு கையில் ஹீலியம் பலூன். எதிரே ஒரு பெருங்கூட்டம் அக்கினி சட்டியின் முன்பு சரியான ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தது. அதில் ஒரு முகம் எனக்கு நன்கு பரிச்சயமானதாக இருந்தது. அருகில் வரும்போது தான் தெரிந்தது அது என் தம்பி என்று. அதான், என் ஆச்சியின் கடைசி செல்லப் பேரன். அக்கினி சட்டி நெருங்க நெருங்க தப்பட்டையின் ஒலி காதைப் பிளந்தது. இந்த உலகத்தில் எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் என் தம்பி கெட்ட ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தான். தப்பட்டையின் ஒலியை விட ஓங்கி ஒலித்தது கோஷம், “ஆஹோ! அய்யாஹோ!”.

– எழுத்தாளர் சீயான்

No Comments

  1. விரதம் என்பதால் அணைப்பு மகனுடன் முடிந்துவிட்டது.

  2. ‘கண்களை மூடி சுதந்திரத்தை உணரும் தருவாயில் மனைவியின் பிரவேசம். என்ன ஒரு முரண்!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *