அனுபவம் – அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு நாள்

இந்தியாவில் பல பெருநிறுவனங்கள் சமூக பணியில் ஈடுபடுகின்றன. ஆங்கிலத்தில் Corporate Social Responsibility என்று அழைப்பர். சமூக பொறுப்புடன் செயல்படும் நிறுவனங்களும் அதில் பணியாற்றும் ஊழியர்களும் இங்கே ஏராளம். மனித நேரம், உழைப்பு மற்றும் பணம் இங்கே தேவைப்படுகின்றன. அதற்கு தானாக முன் வரும் கூட்டத்தில் ஒருவனாக செயல்பட ஒரு வாய்ப்பு இன்று கிடைத்தது.

நான் பணிபுரியும் DXC Technology எனும் நிறுவனமும் GlobalHunt Foundationனும் இணைந்து இன்று மட்டும் ஆறு அரசு பள்ளிகளுக்கு நூலகம், அறிவியல் ஆய்வுக்கூடம் மற்றும் கணிப்பொறி ஆய்வுக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியை சொன்ன சில விஷயங்கள் என்னை பெரிதும் பாதித்தன.

சென்னையின் புறநகர் பகுதியில் இருக்கும் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூடம் இல்லை. அங்கே படிக்கும் மாணவர்கள் எந்த ஒரு அறிவியல் செய்முறையும் செய்வதற்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது. அங்குள்ள சில ஆசிரியர்கள் அவர்கள் சொந்த செலவில் உபகரணங்கள் வாங்கி மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கின்றனர். விளக்கத்தை கேட்டாலும், ஒவ்வொரு மாணவரும் தனியே அதை செய்து, உணர்ந்து பார்த்தால் தானே அது அவர்களுக்கு புரியும்? அதற்கு அங்கே வழி இல்லை.

மாணவர்களின் முழு ஆண்டுத் தேர்வில் தான் அவர்கள் பெரும் சவால்களை சந்திக்கின்றனர். அவர்கள் பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூடம் இல்லாததால், சுமார் இரண்டு கிலோமீட்டர் அருகில் இருக்கும் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு சென்று செய்முறை தேர்வு எழுதும் நிலை உள்ளது. அந்த பள்ளிக்கு பெரும்பாலான மாணவர்கள் நடந்தே செல்கின்றனர். அவர்கள் ஒரு ரயில்வே கடப்பையும், ஒரு தேசிய நெடுஞ்சாலையையும் கடந்து செல்ல வேண்டியுள்ளது. முழு ஆண்டு தேர்வு நடக்கும் வெயில் காலத்தில் காலில் செருப்பு கூட அணியாமல் கல்லிலும், மண்ணிலும், தார் சாலையிலும் நடந்து சென்று அந்த மெட்ரிகுலேஷன் பள்ளியை அரசு பள்ளி மாணவர்கள் அடைகின்றனர். மெட்ரிகுலேஷன் பள்ளியின் வாயிற் காவலர் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு அதிக கெடுபிடிகளை விதிக்கிறார். ஏழைகள் என்றால் திருடர்களா என்ன? லட்சக்கணக்கான பணத்தை திருப்பி கொடுத்த எத்தனை ஆட்டோ ஓட்டுனர்களை நாம் செய்திகளில் படிக்கிறோம்? ஆனால் அரசு பள்ளி மாணவர்களை திருடர்களைப் போல தான் பார்க்கிறார்கள் அந்த வாட்ச்மேன்கள். சில பணக்கார குழந்தைகள் ஏழை குழந்தைகளை ஏளனமாகத்தான் பார்க்கின்றனர். தங்கள் பள்ளிக்கு வெயிலில் வியர்த்து விறுவிறுத்து வரும் இந்த அரசு பள்ளி மாணவர்களை கேலி செய்வதும், தள்ளி விடுவதும், அவர்கள் பொருட்களை சேதப்படுத்துவதும், மிரட்டுவதும் வழக்கமாகியுள்ளது. இதை விடக் கொடுமை ஆசிரியர்கள் செய்வது தான். அனைத்து மாணவர்களையும் சமமாக பாவிக்க வேண்டிய ஆசிரியர்கள் சிலர் கூட தங்கள் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து விதமான சலுகைகளும் முன்னுரிமைகளும் வழங்குகின்றனர்.

சரி, இவர்களுக்கு என்ன தான் தீர்வு? தலைமை ஆசிரியையும், ஏனைய ஆசிரியர்களும் அரசு பள்ளிக்கு ஆய்வகம் அமைக்க நிதி திரட்டும் வேலையில் இறங்குகின்றனர். மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என்று பலரையும் அணுகுகின்றனர். அப்படி தான் எங்கள் நிறுவனத்தையும் அவர்கள் தொடர்பு கொள்கின்றனர். எங்கள் நிறுவனத்தின் சார்பாக ஒரு குழுவும், எங்களுடன் இணைந்து பணியாற்றும் தொண்டு நிறுவனமும் களத்திற்கு சென்று நிலைமையை அறிகின்றனர். அவர்களின் தேவைகள் உண்மையானதா? அது எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகிறது? அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய எவ்வளவு காலம், மனித நேரம், உழைப்பு, பணம் தேவைப்படுகிறது? அதற்கான ஒரு திட்டத்தை வகுக்கின்றனர். அதை படிப்படியாக செயல்படுத்துகின்றனர். பள்ளியின் புதிய அறிவியல் ஆய்வகத்தின் திறப்பு விழா நடைபெறுகிறது. ஊர் பெரியவர்கள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என பள்ளிக்காக உதவி புரிந்த மற்றும் பணியாற்றிய பலரும் வரவேற்கப்படுகின்றனர்.

School Lab-2

பன்னாட்டு நிறுவனங்களின் வருவாய் கோடிகளில் உள்ளன. அதில் ஒரு சிறு தொகையை உண்மையில் தேவைப்படும் நபர்களுக்கு அளிப்பதால் அவர்களின் வாழ்க்கை தரத்தில் சிறிதளவேனும் ஒரு மாற்றம் ஏற்படும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் என்றாலே ஒரு எதிர்மறை பிம்பத்தை உருவாக்கிவிட்டிருக்கின்றனர். இது போன்ற பல களப்பணிகளை பல பன்னாட்டு நிறுவனங்கள் செய்து வருகின்றனர். நீங்களும் உங்களால் முடிந்த உதவியை தனியாகவோ, ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாகவோ உண்மையில் தேவைப்படும் ஒருவருக்கு செய்யுங்கள். நன்றி.

புகைப்பட உதவி: வெங்கட் கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *