சென்னை, ராஜஸ்தான் என்ற பெயர்களை கேட்டதும் இது ஏதோ IPL அல்லது NEET பற்றிய பதிவு என்று எண்ண வேண்டாம். சோக்கி டானி என்ற பெயரை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? ராஜஸ்தான் மாநில கிராமங்களை பின்னணியாகக் கொண்ட உல்லாச போக்கிடங்களை உருவாக்குவது தான் சோக்கி டானி குழுமத்தின் நோக்கம். இவர்களுக்கு சென்னையிலும் ஒரு கிளை உள்ளது. இங்கே ராஜஸ்தான் கிராமிய கண்காட்சி வருடம் முழுவதும் நடைபெறுகிறது. ஒரு மாலை பொழுதை நீங்கள் உங்கள் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ இங்கே களிக்கலாம்.
சென்னையில் இருக்கிறது என்று சொல்வதை விட, சென்னைக்கு மிக அருகில் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ராஜலக்ஷ்மி பொறியியல் கல்லூரியின் அருகே தண்டலத்தில் இருக்கிறது இந்த சோக்கி டானி கண்காட்சி. கார் நிறுத்துமிடம் தாராளமாகவே இருக்கிறது. பெரும்பாலானோர் காரிலேயே வருகின்றனர். வேறு ஏதும் பொது போக்குவரத்து வசதிகள் இங்கே செல்வதற்கு இல்லை. வந்ததும் ராஜஸ்தான் முறையில் திலகமிட்டு அதில் அரிசி பதித்து வரவேற்கின்றனர். முதலில் அனுமதி சீட்டு பெரும் இடம். கட்டணம் மற்றும் இதர விபரங்களை இறுதியில் குறிப்பிட்டுள்ளேன்.
இங்கே இருக்கும் சில சிறப்பம்சங்கள் இதோ:
சிற்றுண்டி மற்றும் பானங்கள்
ராஜஸ்தான் நடனங்கள்
நாட்டுப்புற இசை
சவாரிகள்
கேளிக்கைகள்
இரவு ராஜஸ்தானிய உணவு
முதலில் நுழைந்தவுடன் படகு சவாரி இருக்கிறது. சிறிய கோட்டையின் அகழியில் ஒரு நிமிடத்தில் சுற்றி வரக்கூடிய சவாரி அது. கோட்டையில் நடுவில் நீங்கள் பொய் கால் குதிரை ஆடலாம், இசை இசைக்க கலைஞர்கள் உள்ளனர். குயவர் ஒருவர் மண்பாண்டங்கள் செய்கிறார். நீங்கள் விரும்பினால், உங்களையும் செய்ய வைக்கிறார். செய்த மண் பாண்டங்களை ஒரு தொன்னையில் கொடுக்கிறார். முதலில் நீங்கள் இதை செய்து வாங்கினால் ஈர மண்பாண்டங்களை பாதுகாப்பது சிரமமாக இருக்கும். இறுதியில் கிளம்பும் நேரம் மண்பாண்டங்கள் செய்து வாங்கிச்செல்லுங்கள்.
சாய் பாபாவின் ஒரு குகை கோவில் உள்ளது. அதன் அருகில் சிறிய அருவி போல் அமைப்பும், தண்ணீர் மேல் சிறிது நடைப்பாலம் உள்ளது. ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது. இங்கொன்றும் அங்கொன்றுமாக சிற்றுண்டிகள் தயாரித்து வழங்குகின்றனர். கம்பு, சோளம் போன்றவற்றில் செய்த இனிப்பு மற்றும் கார ரொட்டிகள் கிடைக்கின்றன.
குடிப்பதற்கு ஏதாவது ஒரு பானம், சில வகை சிற்றுண்டிகள் மற்றும் இனிப்புகள் வழங்குகின்றனர். இவையனைத்தும் சிறிய அளவில் ஒரு தொன்னையில் வழங்கப்படுகிறது. மாட்டு வண்டி, குதிரை வண்டி, ஒட்டக வண்டி போன்றவற்றில் சுற்றி வரலாம். ஒட்டகம் மற்றும் குதிரை மீது சவாரி செய்யலாம். விலங்குகள் அனைத்தும் மிகவும் வயது முதிர்ந்து பரிதாபமாக காணப்படுகின்றன. விலங்குகள் நல்லபடியாக பராமரிக்கப்படுகின்றன மற்றும் விலங்குகளால் ஏற்படும் விபத்துகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்று அறிவிப்பு பலகைகள் உள்ளன.
சிறுவர்களை பணியமர்த்தவில்லை என்ற அறிவிப்புகள் இருந்தாலும் சில பணியாளர்கள் சிறுவர் சிறுமியர்களாக உள்ளனர். சிறுவர்கள் கயிற்றில் நடப்பது போன்ற சாகசங்கள் செய்கின்றனர். பாதை கண்டுபிடிக்கும் புதிர் விளையாட்டு உள்ளது. நீங்களே உள்ளே நடந்து சென்று வெளியே செல்லும் பாதையை கண்டுபிடிக்க வேண்டும். நாம் நின்று விளையாடும் அளவிற்கு பெரிய பரமபத மேடை உள்ளது. பெரிய சுத்தியலைக் கொண்டு ஓசை எழுப்ப மணி ஒன்று உள்ளது. கிளி ஜோசியம் பார்க்கிறார் ஒருவர். ஒரு சிறிய மேடையில் அமர்ந்து மேஜிக் செய்து காட்டுகிறார் ஒருவர். வட இந்தியாவின் பிரபலமான தலை மசாஜ் செய்ய இடம் உள்ளது. இது போக ஐஸ் கோலா, பலூன் சுடுதல், புகைப்படம் எடுத்தல், கைவினை பொருட்கள் மற்றும் பொம்மைகள் விற்பனை நடைபெறுகிறது(இவற்றிற்கு தனியாக கட்டணம் வசூல் செய்கின்றனர்). பொம்மலாட்டமும் இருக்கிறது. ராஜஸ்தானிய நடனம் ஆடுகின்றனர், தீயைக் கொண்டு மற்றும் ஆணி மேல் நின்றும் உடலை வில் போல வளைத்தும் நடனமாடுகின்றனர். மரத்தடியில் அமர்ந்து நாட்டுப்புற இசையை கேட்கலாம். இசை புரியவில்லை என்றாலும் அருமையாகவே உள்ளது. உண்மையில் ஏதோ ஒரு ராஜஸ்தானிய கிராமத்திற்கே நம்மை அழைத்து சென்றுவிடுகிறது. பார்வையாளர்கள் ஆடுவதற்கும் மேடைகள் உள்ளன.
இரவு ராஜஸ்தானிய உணவு மிகவும் சிறப்பாக இல்லை என்றாலும், ஓரளவிற்கு வெவ்வேறு உணவு வகைகளை சுவைக்கலாம். இரவு உணவு முடிந்ததும் என் மனைவியும் குழந்தைகளும் மருதாணி வைத்துக்கொண்டனர். நான் ஒரு கயிற்றுக் கட்டிலை தேடிச்சென்று அதில் படுத்துக்கொண்டேன். மல்லாந்து படுத்து மேலே பார்க்கும் பொழுது, வானம், நிலா, நட்சத்திரங்கள், மரத்தின் இலைகள் மட்டுமே கண்களுக்கு தெரிந்தன. பின்னணியில் ஏதோ வேற்று மொழி இசையும் கேட்டது. நான் சிறு வயதில் கிராமப்புறங்களில் இதே போன்று மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் படுத்து தூங்கியுள்ளேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது.
நகர்ப்புறங்களில் வளரும் பிள்ளைகளுக்கு கிராமப்புறம் எப்படி இருக்கும் என்பதை அறிய வாய்ப்பில்லாமல் போய் விட்டது. இங்கே ஒரு ராஜஸ்தான் கிராமம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க முடிகிறது. இதே போல தமிழக கிராமங்களில் உள்ள பொதுவான விஷயங்களைக் கொண்டு இப்படி ஒரு போக்கிடத்தை உருவாக்கினாலும் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பது என் எண்ணம்.
கடந்த ஐந்து வருடங்களில் கட்டணத்தை கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்த்திவிட்டனர். இருப்பினும் விடுமுறை நாட்களில் அதிக கூட்டமாக மக்கள் வருகின்றனர். ஒவ்வொரு இடத்திலும் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. பணிபுரிபவர்களுக்கு டிப்ஸ் அளிக்க வேண்டாம் என்று எல்லா இடங்களிலும் அறிவிப்புகள் உள்ளன. ஆனால் பெரும்பாலானோர் டிப்ஸ் எதிர்பார்க்கின்றனர்; சிலர் வற்புறுத்தவும் செய்கின்றனர். பார்வையாளர்கள் பலரும் வரிசையில் வராமலும், ஒரு குறைந்தபட்ச சபை நாகரீகம் இன்றி நடந்துகொள்வதும் வருத்தமே.
+91 8056006677 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப்பில் ‘Hi’ என்று அனுப்பினால் உங்களுக்கு விபரங்கள் அடங்கிய ஒரு கோப்பை அனுப்புகின்றனர். அதில் கட்டணம் முதற்கொண்டு சகல விபரங்களும் உள்ளன.