சில நாட்கள் முன்பு உறவினர்கள் சிலருடன் மதிய உணவு உண்ணும் நல்வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது ஒருவர் மட்டும் எங்களுடன் அமர்ந்திருந்தாலும் உணவு ஏதும் உண்ணவில்லை, விரதம் என்றார். மற்றொரு போலி-பகுத்தறிவுவாதி உறவினர் ஒருவர் இவரை கேலி பேச ஆரம்பித்தார். விரதத்தில் தொடங்கிய அவர் படிப்படியாக வேறு சில மதநம்பிக்கை சார்ந்த விஷயங்களைப் பற்றியும் பேசினார், நடுவில் கொஞ்சம் அறிவியல் அது-இது என்று வேறு சேர்த்துக்கொண்டார். நான் அவரிடம் விரதம் பற்றி இரண்டு அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்றுள்ளனர் என்று சொல்லியிருக்கலாம், ஆனால் சொல்லவில்லை. மாறாக இங்கே எழுதியுள்ளேன்.
விரதம்
விரதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலம் உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் இருப்பது. இந்து, கிறித்துவம், இஸ்லாம், பௌத்தம், சமணம் மற்றும் இன்னும் பல மதங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும் எனில் அது விரதம் தான். ஒவ்வொரு மதத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதத்தின் கால அளவும், தீவிரமும், பழக்க வழக்க முறைகளும், விரதத்திற்கு வழங்கப்படும் பெயர் வேறுபட்டாலும் விரதம் என்ற அந்த அடிப்படைத் தத்துவம் மாறுவதில்லை. மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்தவே படைக்கப்பட்டன என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. அப்படிப்பட்ட மதங்களின் அடையாளங்களிலும், நடைமுறைகளிலும் அறிவியலும் கலந்திருக்கிறது. காலப்போக்கில் மக்களிடையே பகுத்தறிவு குறைந்து, மதத்தின் பின்னால் இருக்கும் அறிவியலை பகுத்து அறியும் குணமும் குறைந்தது. அப்படி விரதத்தின் பின்னால் இருக்கும் ஒரு அறிவியல் தான் ஆட்டோஃபேகி.
ஆட்டோஃபேகி
வளர்சிதை அல்லது மெட்டபாலிசம் என்ற ஒரு அறிவியல் சொல்லை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? நம் உடம்பில் உள்ள இரசாயன மூலக்கூறுகள் வளர்வதையும் சிதைவதையும் உள்ளடக்கிய ஒரு வேதியியல் நிகழ்வு தான் வளர்சிதை. ஒரு குழந்தையின் வளர்சிதையில் வளர்ச்சி அதிகமாகவும் சிதைவு குறைவாகவும் இருக்கும். ஒரு வயோதிகரிடம் சிதைவு அதிகமாகவும் வளர்ச்சி குறைவாகவும் இருக்கும். நாம் உண்ணும் உணவு தான் இந்த வளர்சிதைக்கு தேவையான இரசாயன மூலக்கூறுகளாகவும், ஆற்றலாகவும் மாற்றப்படுகிறது. சிதைவு தான் நம் உடம்பின் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. நம் உடம்பில் உள்ள மூலக்கூறுகள் சில ஆரோக்கியமானதாகவும், சில சிதிலமடைந்தும் இருக்கும். இந்த ஆரோக்கியமான மூலக்கூறுகள் செயல்படத் தேவையான ஆற்றலைக் கொடுப்பது நாம் உண்ணும் உணவு மட்டும் அல்ல. சில வேளைகளில், சிதிலமடைந்த மூலக்கூறுகளை அழித்து ஆரோக்கியமான மூலக்கூறுகள் அதற்கு தேவையான இரசாயனங்களையும் ஆற்றலையும் பெற்றுக்கொள்கின்றன. சுருக்கமாக சொல்லப்போனால், மூலக்கூறுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இந்த நிகழ்வுக்குப் பெயர் தான் ஆட்டோஃபேகி.
அறிவியல்
விரதம் இருப்பது நம் உடம்பில் ஆட்டோஃபேகி எனும் வேதியியல் நிகழ்வை ஏற்படச் செய்கிறது. ஆட்டோஃபேகி என்ற சொல்லை 1963ல் முதலில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தவர் கிறிஸ்டியன் டி டுவ் என்ற இங்கிலாந்து-வாழ் பெல்ஜிய அறிஞர். அறிவியலில் இவர் பங்களிப்பைப் பாராட்டி 1974ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் ஆராய்ச்சியை மேலும் தொடர்ந்து, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோஷினோரி ஒசுமி ஆட்டோஃபேகியையும் அதன் செயல்பாட்டைக் குறித்தும் ஆராய்ந்து 2016ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.
அறிவியலால் முழுவதும் புரிந்துகொள்ள, விளக்க முடியாத ஏராளமான நிகழ்வுகள் இவ்வுலகில் உள்ளன. பல ஆண்டுகளாக ஆராய்ந்து பாதி தூரம் கூட அடையாத ஆட்டோஃபேகி ஆராய்ச்சியும் இதற்கு ஒரு உதாரணம். மதமும், இறைநம்பிக்கையும் அதை ஆராயாமல், காரண காரியங்களைத் தேடாமல் ஒன்றின் மீது முழுவதுமாக நம்பிக்கை வைத்து, பரிபூரணமாக அதை உணர்ந்து, நன்மையடைகிறது.
Good post. Keep Writing
Thank you Rajesh!