சிறுகதை – மதிய உணவு

விமான பணிப்பெண்கள் பயணத்தின் போது தேவையான பாதுகாப்பு குறித்து நடைமுறை விளக்கமளித்துக் கொண்டிருந்தனர். உதட்டில் போலி சிரிப்பும், ஒரு இயந்திரத்தை போன்ற பாவனைகளையும் பல நூறு முறை பார்த்து அலுத்துவிட்டது சதீஷுக்கு. அவனது ஓரியென்ட் கைக்கடிகாரத்தை பார்த்தான்; ஓசக்காவிலிருந்து க்வாலா லும்பூர் வழியாக திருச்சி செல்ல குறைந்தபட்சம் ஞாயிறு காலை 1 மணியாகிவிடும். ‘என்ன செய்யலாம்?’ விமானத்தில் என்னென்ன திரைப்படங்கள் இருக்கிறது என்று பார்த்தான், முக்கால்வாசி தமிழ் படங்கள் கேள்விப்பட்டதாகவே இல்லை. முன்பொரு காலத்தில் அடுத்த மூன்று மாதங்களில் வரப்போகும் அனைத்து படங்களின் புள்ளி விவரங்களும் அவன் விரல் நுனியில் இருக்கும். அருகில் அமர்ந்திருந்த மேற்கத்திய முதியவர் தூங்கிவிட்டார். சேவை டிராலி சிறிது தொலைவில் உருளும் சத்தம் கேட்டது. எதுவும் வேண்டாம் என்று நினைக்கும் வேளையில் யாரோ ஒருவருக்கு கண்ணாடி கோப்பையில் பானம் ஊற்றும் சத்தம் கேட்டது. ஜப்பானிய பணிப்பெண் புன்னகையுடன் அவர்களது வழக்கத்தில் வணக்கம் செலுத்தினார். அவனும் வணக்கம் செலுத்திவிட்டு, “விஸ்கி, ஆன் தி ராக்ஸ் ப்ளீஸ்.” என்றான். ‘கயல் விழியோ, கிளி மூக்கோ இல்லை என்றாலும் ஜப்பானிய பெண்களும் அழகு தான்!’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான். “அரீங்காதோகோஸாய்மாஷ்தா” ‘நமது தமிழில் தான் நன்றி என்று அழகாகவும் சுருக்கமாகும் சொல்ல முடிகிறது.’

அன்றைய கணக்கு வழக்குகளை முடித்துவிட்டு புத்தகத்தை மூடிவைத்தான் குமார். அவனது டைட்டன் கைக்கடிகாரத்தில் நேரம் சரியாக இரவு 10, வெள்ளிக்கிழமை. அலுவலக அறையை மூடிவிட்டு நாயை அவிழ்த்துவிட்டான். அதற்கு குடிப்பதற்கு தண்ணீர் வைத்தான். பைரவன் எப்பொழுதும் சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதில்லை. அதனால் ஆழ்துளை கிணற்று தண்ணீரைத்தான் வைத்தான். தொழிற்சாலை வாயிற்கதவை தாழிட்டு கைபேசியை எடுத்தான். மூன்று பேர் மட்டுமே இருக்கும் அந்த வாட்ஸ் ஆப் குழுவிற்கு “கிளம்பியாச்சா?” என்ற செய்தியை அனுப்பினான். ஒரு நிமிடத்திற்கு பிறகும் யாருக்கும் செய்தி சென்றடையவில்லை. சதீஷ் வரும் விமானம் புறப்பட்டிருக்கும் என்று நினைத்தான். என்னை கைபேசியில் அழைத்தான், “நீங்கள் டயல் செய்த நபர் வேறொருவ…” என்று தானியங்கி பதில் வர அணைத்துவிட்டான். அவன் புல்லெட்டில் அமர்ந்து, உதைத்து, வீட்டிற்கு பறந்தான். தெருமுனையில் வரும் பொழுதே அவன் மனைவி வீட்டுக்கதவை திறந்து விடுவார். கை, கால், முகத்தை கழுவிவிட்டு வேட்டியிலிருந்து கைலிக்கு மாறி தொலைக்காட்சியின் முன் தரையில் அமர்ந்தான். இரவு உணவு பால் சோறும் பக்கோடாவும். சன் மியூசிக் தொலைக்காட்சியில் இளையராஜாவின் இசையை ரசித்தபடியே சாப்பிட ஆரம்பித்தான். “பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க…” என்று அவன் கைபேசியும் சேர்ந்து பாடியது, நான் தான் அழைத்தேன்.
“யார்ட்ட டா கடல போட்டுட்டு இருந்த?” இது அவன்.
“டேய் முதலாளி, ஆஃபிஸ் கால் டா!” என்றேன் நான்.
“சரி காலைல கள்ளிக்குடி தாண்டுனதும் கூப்பிடு. எதுக்கும் உன் டிக்கட்ட அனுப்பி வை.”
“சரி டா.”

இந்நேரம் சேலம் வந்திருக்க வேண்டும், ஆனால் இன்னும் தர்மபுரியே வரவில்லை. நாகர்கோயில் செல்லும் இந்த ரயில் விருதுநகருக்கு அதிகாலை 3:30க்கு வந்து சேரும். எனது கைபேசியில் 3:00, 3:10, 3:15, 3:18, 3:19 மற்றும் 3:20 என்று அலாரம் வைத்துக்கொண்டேன். அலுவலகத்திலிருந்து ஒரு அழைப்பு வர, அவர்களுக்கு தேவையான விவரங்களை சொல்வதற்கு அரைமணி நேரம் ஆனது. நான் விடுப்பு எடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இப்பொழுது ஒரு வாரம் விடுப்பு எடுத்திருக்கிறேன். எதைப்பற்றியும் சிந்திக்காமல், குறிப்பாக அலுவலகம் குறித்த எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கடமை அழைத்துக்கொண்டே இருக்கிறது. இரண்டாம் தர ஏசி பெட்டியில், மேல் பெர்த்தில் படுத்திருந்தேன். ஏசியின் சத்தம் அதிகமாக இருந்தது. அதிகாலை சீக்கிரம் எழ வேண்டும், இரவு சீக்கிரம் தூங்க வேண்டும் என்று நினைக்கும் போது தான் தேவையில்லாத அனைத்து எண்ணங்களும் கற்பனைகளும் வரும். பள்ளிப் பருவம் தான் எவ்வளவு மகிழ்ச்சியானதாக இருந்தது? எதற்கு இப்படி வளர்ந்து ஆளாகி பாரங்களை சுமந்து சாக வேண்டும்? சுத்தமாக தூக்கம் வரவில்லை. ஜீன்ஸ் காற்சட்டையிலிருந்து சிரமப்பட்டு கைபேசியை எடுத்து பேஸ்புக் பார்க்கத் துவங்கினேன். என்னைத் தவிர இந்த உலகமே மகிழ்ச்சியாக இருப்பதை போல உணர்ந்தேன். உதாரணமாக என் நண்பர்களையே எடுத்துக்கொண்டால், ஒருவன் ஜப்பானிய பெண்ணை திருமணம் செய்து ஜப்பானிலேயே குடியேறிவிட்டான். இன்னொருவன் சொந்த ஊரில், சொந்தமாகவே தொழில் செய்து; அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் என்று சந்தோஷமாக வாழ்கிறான். நான் தனி மரமாக பெங்களூரு மடிவாலாவில் ஒரு விடுதியில் இருக்கிறேன். அலுவலகத்தில் இருந்து அடுத்த அழைப்பு வந்தது.

“டேய் சீக்கிரம் எறங்கு டா!” குமார் என்னை தட்டி எழுப்பினான். ‘ஐயோ! விருதுநகர் ரயில் நிலையம் வந்து விட்டது போல.’ மேல் படுக்கையிலிருந்து தாவி குதித்து இறங்கினேன். ரயில் கிளம்பியது. மெதுவாக ஓடும் ரயிலிலிருந்து இருவரும் இறங்கினோம்.
“ஏன்டா, அலாரம் வைக்கல? நான் அத்தன தடவ போன் போடறேன், அதையும் எடுக்கல!”
“சாரி டா, லேட் நைட் ஆஃபிஸ் கால் இருந்தது.”
“சரி உடு. அப்பா அம்மா நல்லா இருக்காங்களா?”
“நல்லா இருக்…”
“சாவடிச்சுருவேன்! ஏண்டா, ஊருக்கு வந்து ரெண்டு வருஷம் ஆகுது. அவங்களும் பெங்களூரு வர்ரது இல்லையாம். ஏன்டா இப்படி? ஏதாவது சொன்னா ஊருக்கே வரமாட்ட…”
“வந்தோனே ஆரம்பிக்காத டா. அப்புறம் பேசலாம். உன் வீட்டுக்கே போகலாம்.”
இருவரும் வண்டியில் அமர்ந்து குமார் வீட்டிற்கு சென்றோம். அவன் வீட்டிலுள்ள அனைவரும் என்னை வந்து நலம் விசாரித்தார்கள். குழந்தைகள் கூட மாமா என்று ஆசையாக அழைத்தார்கள். ஒன்றாம் வகுப்பு படிக்கும் அவன் மகள் எனக்கென்று கையால் வரைந்த ஒரு கிரீட்டிங் கார்டை கொடுத்தாள். எனக்கு அதை பார்த்த பொழுது அழுகையே வந்துவிட்டது. நான் ஒன்றுமே வாங்காமல் வெறும் கையுடன் தான் வந்திருந்தேன்.

நாங்கள் மூவரும் இணை பிரியா நண்பர்கள். க்ஷத்திரிய வித்தியா சாலை மேல்நிலை பள்ளியில் இரண்டு ஆண்டுகள் ஒன்றாகப் படித்தோம். நானும் சதீஷும் பதினோராம் வகுப்பில் கணிப்பொறி பிரிவை தேர்ந்தெடுத்தோம். குமார் வசதி குறைவினால் மேலே படிக்கவில்லை. எங்கள் இருவரை விட அவன் தான் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தான். அவன் வீட்டருகே ஒரு தொழிற்சாலையில் தினசரி சம்பளத்திற்கு வேலை பார்க்கத் தொடங்கினான். நாங்கள் இருவரும் கூட வசதி குறைந்த நடுத்தர வர்க்கம் தான். அதன் பின்பு எங்கள் மூவரின் நட்பு இன்னும் நெருக்கமானது. விடுமுறை நாட்களில் தோலாண்டி திருமண மண்டபத்தின் அருகே ஒன்றாக கிரிக்கெட் விளையாடுவோம். விளையாடி முடித்ததும் குமார் எங்கள் இருவருக்கும் ஒரு சைக்கிள் வண்டியில் வரும் ஐஸ் வாங்கித்தருவான். நாங்கள் மூவரும் தீவிரமான ரஜினி ரசிகர்கள். அனைத்து தலைவர் படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடுவோம். நாங்கள் கல்லூரி முடிக்கும் முன்பே குமாருக்கு திருமணமாகிவிட்டது. அவனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில மாதங்களில் அவன் வேலைக்காக ரியாத் சென்றுவிட்டான். இரண்டு ஆண்டுகள் மிகவும் சிரமப்பட்டு சிறிது பணம் சேர்த்தான். பின்பு அதையே முதலாகக் கொண்டு சிறு தொழில் தொடங்கினான். அந்நேரம் நான் அமெரிக்காவில் இருந்தேன், சதீஷ் அப்பொழுது தான் ஜப்பான் செல்ல விசா எடுத்திருந்தான். காலப்போக்கில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது குறைந்தது. ஆனால் கைபேசி, சமூக வலைத்தளங்களில் தொடர்பில் இருந்தோம்.

நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில், ஹாக்கி மைதானம் அருகேயுள்ள வேப்பமர நிழலில் அமர்ந்து தான் மதிய உணவு சாப்பிடுவோம். குமார் மட்டும் பள்ளியில் சத்துணவு சாப்பிடுவான். மூவரும் விரைவாக சாப்பிட்டுவிட்டு பின்பு தென்னைமட்டை, டென்னிஸ் பந்தை கொண்டு கிரிக்கெட் விளையாடுவோம். இப்பொழுது அந்த வெயிலில் எங்களால் தொடர்ந்து ஐந்து நிமிடம் நிற்க முடியுமா என்பதே சந்தேகம். எங்கள் இத்தனை ஆண்டு கால நட்பில் நாங்கள் ஒரு முறை கூட ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டதில்லை. தற்செயலாக சில நாட்கள் முன்பு வாட்ஸ் ஆப்பில் இது பற்றிய பேச்சு எழுந்தது. உடனே ஒரு மனதாக மூவரும் ஒரு முடிவெடுத்தோம். விரைவில் நாங்கள் ஒன்றாக மதிய உணவு உண்ண வேண்டும் என்பது தான் அது; அதுவும் எங்கள் பள்ளியில், அதே வேப்ப மர நிழலில். குமார் உள்ளூரில் இருப்பதால் பள்ளியின் நிர்வாகத்தினரை சந்தித்து அனுமதி பெற்றான். முதலில் மறுத்தவர்களை, ஒரு விடுமுறை நாளைக்கு எப்படியோ பேசி சம்மதிக்க வைத்துவிட்டான். பயணச்சீட்டை பதிவு செய்தோம், நான் வந்துவிட்டேன். சதீஷும் வந்துவிடுவான், நாளை நாங்கள் திட்டமிட்டபடியே மதிய உணவு.

சனிக்கிழமை இரவு உணவு நானும் குமாரும் அல்லா பிச்சை ஹோட்டலில் சாப்பிட்டோம். பின்பு கணேசர் மார்க்கில் குடிப்பதற்கு எனக்கு எல்லோ மில்க்கும், குமாருக்கு மசாலா சோடாவும் வாங்கி தெப்பக்குளம் வரப்பில் அமர்ந்தோம். தெப்பத்தில் தண்ணீர் நிரம்பி இருந்தது. வண்ண மின்விளக்குகளின் வெளிச்சத்தில் மிக அழகாக இருந்தது. மாலை மழை பெய்திருந்ததால் வானிலை பெங்களூரை போலவே இருந்தது.
“என்னடா ஆச்சு?” என்று மெதுவாக ஆரம்பித்தான் குமார்.
“எதுவுமே ஆகல டா. எனக்கு கல்யாணம் ஆகல டா. நீ ரெண்டு குழந்தைக்கு அப்பா. அவன் ஜப்பான்காரிய கல்யாணம் பண்ணிட்டான். என்னால என் அப்பா அம்மாவ கூட பாக்க முடியல. இதுல நான் தான் என்னமோ சந்தோஷமா இருக்குற மாதிரியே ரெண்டு பேரும் பேச வேண்டியது.”
“நம்ம மூணு பேர்ல நீ தான்டா அழகன்…”
“இப்படி பேசுறத விட்டுட்டு ஒரு நல்ல பொண்ண பாரு. குறிப்பா செவ்வா தோஷம் இருக்குற பொண்ணு.”
“சூப்பர் டா! உனக்கு செவ்வா தோஷமா?”
“ஏன் டா, என்ன பாத்தா எப்படி தெரியுது உனக்கு? செவ்வா தோஷம் இருந்தா சூப்பரா?”
“டேய், உனக்கு நித்யாவ ஞாபகம் இருக்கா?”
“யாரு உன் சித்தி பொண்ணா? உன் தங்கச்சினு தெரியாம அவ பின்னாடி சுத்தி உங்கிட்ட +2 படிக்கும் போது அடி வாங்குனேனே.”
“அவளே தான்! அவளுக்கும் செவ்வா தோஷம். பல வருஷமா வரன் பாக்குறாங்க. உன் போட்டோ, ஜாதகம் போன்ல இருக்கா?”
“நீ செவ்வா தோஷம்னு சொன்னப்பவே உனக்கு அனுப்பிட்டேன் டா. வாட்ஸ் ஆப் பாரு.” அசடு வழிந்தேன்.
குமார் அவன் சித்திக்கு தகவல் அனுப்பிவிட்டு உடனே போன் செய்தும் பேசினான்.

சதீஷை திருச்சிக்கு சென்று அழைத்து வர கிளம்பினோம். குமார் வீட்டிற்கு சென்று காரை எடுத்து டீசல் நிரப்பி மதுரை சாலையை அடைந்தோம். ஒவ்வொரு முறையும் பெண் பார்க்கத் துவங்கியதும், பல பகல் கனவுகள் காணத்தோணும். பின்பு அது இல்லை என்று ஆனதும் மிகவும் வேதனையாக இருக்கும். இம்முறை நான் ஒரு கனவும் காணப்போவதில்லை. ஆனால் பள்ளி காலத்தில் நான் பார்த்த நித்யாவின் முகம் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு பேச்சுப்போட்டியில் தான் அவளை முதலில் சந்தித்தேன். நான் பேசும் முறை வந்தது. அவள் முன் இருக்கையில் அமர்ந்திருந்தாள். அப்பொழுது அவர்கள் பள்ளியின் சீருடை ரோஸ் நிற தாவணி, கண்ணுக்கு மையிட்டிருந்தாள், சிறிய சிவப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு, அதன் மேல் திருநீர் கீற்று, எட்டணா அளவில் ஒரு வளையம் தான் காதணி, வளைந்து நெளிந்த ஒற்றை வளையல் இரு கைகளிலும், இரட்டை ஜடை; எனக்கு பேச வேண்டியது அத்தனையும் மறந்து போய்விட்டது. தொண்டையில் ஒரு டென்னிஸ் பந்து சிக்கிக்கொண்டதைப் போல இருந்தது. பேச முயற்சித்த பொழுது வெறும் காற்று தான் வந்தது, வார்த்தைகள் வரவில்லை. பலரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். அவள் என்னை ஏளனமாகப் பார்க்கவில்லை; ஒரு நுண் புன்னகை மட்டுமே செய்தாள். மேடையிலிருந்து இறங்கி என் இருக்கைக்குச் சென்றேன். வேறொரு பள்ளி மாணவர் கூட்டம் என்னை கேலி செய்வதற்காகவே சத்தமாக நீண்ட நேரம் கை தட்டினார்கள். “பெண் விடுதலை” என்ற தலைப்பில் அடுத்து வந்து அவள் பேசினாள். பேசி முடித்ததும் எங்கள் தமிழ் ஆசிரியர் அவளுக்கு தான் நிச்சயம் முதல் பரிசு என்றார். அப்படியே நடந்தது. அரங்கமே அதிரும் அளவு கரவொலி கேட்டது.

“டேய்! என்னடா பேய் பிடிச்சவன் மாதிரி இருக்க?” என்று தோளைத் தொட்டான் குமார்.
“லேசா தல வலிக்குதுடா. நான் தூங்குறேன், திருச்சி வந்ததும் சொல்லு.”

பின்பு அவளை ஒரு முறை மகர நோன்பில் பார்த்தேன். அன்றே பின்தொடர்ந்து அவள் வீட்டை கண்டுபிடித்தேன். நான் செய்வது தவறு என்று தோன்றியது. ஆனால் ஒரு நொடி அவளைப் பார்த்தால் கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே, அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சைக்கிளில் அவள் வீட்டருகே சுற்றித் திரிந்தேன். ஆறு மாதத்தில், இரு முறை மட்டுமே அவளைப் பார்க்க முடிந்தது. அப்படி ஒரு நாள் சுற்றும் போது குமார் வந்தான். அவளும் அவ்வழியே சென்றாள். குமாரிடம் அவள் தான் என் ஆள் என்றேன். ஓங்கி ஒரு அறை விட்டான். அது அவன் தங்கை என்று சொல்லிவிட்டு உடனே கிளம்பிவிட்டான். அன்று மாலை கிரிக்கெட் விளையாடும் பொழுது கூட குமார் என்னிடம் பேசவில்லை. சதீஷிடம் விஷயத்தை சொல்லி அவன் தான் இருவரையும் பேசவைத்தான். குமார் என்னை அடித்ததற்கு மன்னிப்பு கேட்டான். எனக்கு அவள் அவன் தங்கை என்று தெரியாது என்றேன். பின்பு இத்தனை வருடங்களில் ஒரே ஒரு முறை மட்டும் நான் அவளை மாரியம்மன் கோவிலில் பார்த்தேன். பார்த்தும் பார்க்காதது போல சென்று விட்டேன்.

திருச்சி விமானநிலைய பயணிகளை வரவேற்கும் இடத்திற்கு வந்துவிட்டோம். சதீஷ் மட்டும் தான் வந்திருந்தான். பல காலம் கழித்து உண்மையிலே ஒரு சந்தோஷமான தருணம் எங்களுக்குக் கிடைத்திருந்தது. திருச்சியில் தொடங்கிய பேச்சை குமார் வீட்டு வாசல் வரை நிறுத்தவில்லை. வண்டியிலிருந்து இறங்கிய பொழுது மூன்று பேரும் பற்கள் தெரிய சிரித்துக்கொண்டிருந்தோம். நான் கிட்டத்தட்ட நித்யாவை மறந்தே போயிருந்தேன்.

சகல ஏற்பாடுகளுடன் எங்கள் கனவு மதிய உணவிற்கு தயாராகிவிட்டோம். பள்ளியின் வெளியே வாயிற்காவலர் எங்களை நிறுத்தினார். சில கைபேசி அழைப்புகளுக்குப் பிறகு எங்களை உள்ளே அனுமதித்தார். பல வருடங்கள் கழித்து பள்ளியில் காலெடுத்து வைக்க உடல் சிலிர்த்தது. காரை பிள்ளையார் கோவில் அருகே நிறுத்தினோம். முதல் வணக்கம் பிள்ளையாருக்குத் தான். +1 படிக்கும் பொழுது நான், சதீஷ், மற்றும் சில மாணவர்கள் கோவிலையும் அங்கே இருக்கும் வெண்கல பொருட்களையும் சுத்தம் செய்வோம். சாமி கும்பிடும் பொழுது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி; நற்செய்தி வரப்போகிறது என்ற ஒரு உள்ளுணர்வு. நெடுஞ்சாலையில் ஒரு லாரி பெரிய ஒலியை எழுப்ப, நந்தவனத்து மரங்களிலுள்ள பெரும் பழம் தின்னி வௌவால்கள் கூட்டமாகப் பறந்தன. எங்கள் வழக்கமான வேப்ப மரத்திற்கு நடந்து சென்றோம். பள்ளியில் சில புதிய கட்டிடங்கள் முளைத்திருந்தன. அருமையான வானிலை இன்று, மதிய வெயில் கூட இதமாக இருந்தது. வேப்பமரம் வளர்ந்திருந்தது, நாங்கள் சிறுவர்கள் ஆனோம். சைக்கிள் நிறுத்துமிடம் அருகே ஒரு தென்னைமட்டை இருந்தது. அது எங்கள் மூவரின் கவனத்தையும் ஈர்த்தது. சிரித்துக்கொண்டே சாப்பாட்டுக்கூடை உள்ளேயிருந்து ஒரு டென்னிஸ் பந்தை எடுத்துக் காட்டினான் குமார். எல்லோர் முகத்திலும் சிரிப்பு. சாப்பாட்டை எடுத்து வைத்தோம் ஆனால் ஏற்கனவே வயிறும் மனதும் நிறைந்திருந்தது. இருந்தும் பேசி வைத்ததைப்போல் சாப்பிட அமர்ந்தோம். எனது கைபேசி அதிர்ந்தது. இந்த கைபேசி தான் எங்களை நிகழ் காலத்திற்கு அழைத்து வந்து விட்டது; அலுவலகத்திலிருந்து ஒரு அழைப்பு. குமார் என் கைபேசியை பறித்து அணைத்துவிட்டான்.
“ப்ளீஸ் டா! ஆஃபிஸ் கால்.” என்றேன். இருவரும் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இவர்களுடன் போராடி ஒரு பயனும் இல்லை என்று விட்டுவிட்டேன். அவர்கள் இருவரும் அவரவர் கைபேசியை அணைப்பதற்காக எடுத்தார்கள். எடுத்த கணம் குமாருக்கு ஒரு அழைப்பு வந்தது.
“சித்தி, சொல்லுங்க… பாத்துட்டீங்களா?… பொருத்தம் நல்லா இருக்கு, சரி… பாப்பாக்கும் பிடிச்சிருக்கு… சரி சித்தி, நான் அவங்க அப்பா அம்மா கிட்ட பேசுறேன்.”

பின் குறிப்பு: நாங்கள் எங்கள் மதிய உணவை நல்லபடியாக முடித்துவிட்டு, தென்னைமட்டை கிரிக்கெட் விளையாடிவிட்டு தான் பெண் பார்க்கச் சென்றோம்.

– எழுத்தாளர் சீயான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *