கையிலிருந்த பணத்தை எத்தனை முறை எண்ணினாலும் மூவாயிரம் தான் இருந்தது. இன்று டிசம்பர் மாதம் 13ஆம் தேதி, இன்னும் 18 நாட்களை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை. சென்ற மாதம் எதிர்பாராமல் வந்த ஒரு மருத்துவச் செலவில் தொடங்கியது. அதன் தாக்கம் இன்னும் எத்தனை மாதங்கள் இருக்குமோ. அடுத்த மாதம் குழந்தைகளின் பள்ளிக் கட்டணமும் சேர்ந்துகொள்ளும். மாத இறுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வேறு. இவை அனைத்திற்கும் இடையே சமையல் காஸ் சிலிண்டர் தீர்ந்துவிட்டது என்ற என் மனைவியின் குரல் கேட்டது. அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் சுற்றுலா செல்ல வேண்டும் என்று கேட்ட செல்லமகளிடம் வேண்டாம் என்றேன். வாடிய முகத்துடன் அவள் திரும்பிச் சென்றாள். பிள்ளையின் ஆசைகளை நிறைவேற்ற இயலாத தந்தை ஆகிவிட்டேன். இயலாமை நொடிப்பொழுதில் கோபமாக மாறியது. என்னை நானே கடிந்துகொண்டேன். எங்கோயிருந்து வந்த ஒரு சிவப்பு நிற டென்னிஸ் பந்து சொடேரென்று எங்கள் வீட்டு கண்ணாடி ஜன்னலை சுக்கு நூறாக உடைத்து தொலைக்காட்சி பெட்டியின் அருகே வந்து விழுந்தது. இன்னும் சிறிது தள்ளி விழுந்திருந்தால், அதுவும் உடைந்திருக்கும். கோபம் கொலைவெறியானது. பந்தை எடுத்துக்கொண்டு வெளியே விரைந்து நடந்தேன். என் மகனும் தான் வெளியே விளையாடிக்கொண்டிருந்தான். என்னை கோபமாகப் பார்த்ததும் தலை தெறிக்க ஓடிவிட்டான். இன்னொரு சிறுவன் அப்பாவியான முகத்துடன் என்னைப் பார்த்து, “சாரி அங்கிள், பால் ப்ளீஸ்.” என்றான். அவன் என் நண்பன் வெங்கடேஷின் மகன். சிறுவயதில் நாங்கள் விளையாடும் பொழுது அக்கம் பக்கத்தில் ஏதும் பொருட்கள் உடைந்தால், வெங்கட் தான் மன்னிப்பு கேட்டு சாமர்த்தியமாகப் பேசி பந்தை மீட்டு வருவான். இன்று அந்த பொறுப்பு அவன் மகனிடம் சென்றுவிட்டது. கண நேர பிளாஷ்பாக்கில் என் கோபம் பனியாக கரைந்து விட்டது. “இன்னொரு கண்ணாடி ஜன்னல் ஒடஞ்சா, பந்தை தரவே மாட்டேன்!” என்று முன்பு போலவே சொல்லி பந்தை கொடுத்துவிட்டேன்.
– எழுத்தாளர் சீயான்