சிறுகதை – என்ன குழந்தை

யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவ் போல இருந்த அந்தக் கர்ப்பப் பரிசோதனை கருவியை நானும் அகல்யாவும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தோம். வெள்ளையாக இருந்த அதன் பின்னணியில் மிகவும் மெதுவாக, ஆனால் அழுத்தமாக ஒரு கோடு மட்டும் தோன்றியது. இருவரின் முகத்திலும் ஏமாற்றம் தெரிந்தது. அகல்யாவின் கண்கள் கலங்கின. நான் சட்டென்று கிளம்பினேன். “எனக்கு இரயிலுக்கு நேரம் ஆகிறது” என்று சொல்லிக்கொண்டே குளியலறைக்குள் சென்றேன். கதவிற்கு தாழ்பாள் போடும் முன்னரே என்னையும் மீறி இரு கண்களிலும் கண்ணீர் வந்திருந்தன. நான் அழுவதை பார்த்தால் அவளுக்கு இன்னும் கஷ்டமாக இருக்குமென்று இங்கே விரைந்து வந்துவிட்டேன். எங்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது, இன்னும் குழந்தைப்பேறு இல்லை; இன்றைய பரிசோதனையில் நல்ல செய்தி வருமென்ற நம்பிக்கையுடன் இருந்தோம்.

குளியலறையில் நின்று நகம் கடித்துக்கொண்டே யோசித்தேன். வெளியே வந்து மறுபடியும் அவள் முகத்தை பார்க்க வேண்டும். பாவம் அவள், காலை நான்கு மணிக்கே ஆர்வமாக எழுந்துவிட்டாள். இன்றைய நாள் பெரும் ஏமாற்றத்துடன் துவங்கியது. அறைக் கதவின் மேலே துண்டும், என் உள்ளாடைகளையும் அகல்யா வைத்தாள். விரைவான காக்காக் குளியலை முடித்து வெளியே வந்தேன்.

வெளியே கதவருகே நின்றுகொண்டிருந்தாள் அகல்யா. அவள் முகத்தை பார்க்க மனமில்லாமல் கீழே குனிந்தபடியேச் சென்றேன். என் வழியை மறித்து நின்றாள்; “வெயிலு!” என்றாள். என் பெயர் வெயில் முத்து. எப்பொழுதாவது மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தால் தான் அவள் என்னை பெயர் சொல்லி அழைப்பாள். நிமிர்ந்து பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவள் கையில் வைத்திருந்த கருவியில் இப்பொழுது இரண்டு கோடுகள் இருந்தன. இரண்டாவது கோடு சிறிது நேரம் கழித்து வந்தது போல. திருமணம் முடிந்த நான்கு வருடங்களில் அவள் முகத்தில் இப்படி ஒரு மகிழ்ச்சியை நான் பார்த்ததே இல்லை. அப்படியே அவளை அள்ளி அணைத்துக்கொண்டேன். நெற்றியில் முத்தமிட்டேன். அய்யாவின் செருமல் சத்தம் சிறிது தூரத்தில் கேட்டதும் சட்டென்று விலகினோம். எங்கள் அறையில் இருந்த நாளிதழை வந்து எடுத்துச் சென்றார். அவர் சென்றதும், நானும் அவளும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம்.

அவளிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றேன். நன்கு ஓய்வெடுக்க வேண்டும். படிக்கட்டில் ஏறி இறங்கக் கூடாது. அதிக எடையுள்ள எதையும் தூக்கக்கூடாது. நல்ல பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இனிப்புகள் அதிகம் சாப்பிடக் கூடாது. என்னை விட அவளுக்கு இந்த விவரங்கள் நன்றாகத் தெரியும். அவள் அக்கா பேறுகாலத்தின் பெரும் பகுதியில் துணையாக இருந்திருக்கிறாள், இருந்தும் அவளிடம் மீண்டும் மீண்டும் கூறினேன்.

பெரும்பாலான தம்பதியினரைப் போல எங்களுக்கும் சண்டை வரும். நாங்கள் அடிக்கடி சண்டை போடுவது இதற்காகத் தான், ‘என்ன குழந்தை?’. எனக்குப் பெண் குழந்தை வேண்டுமென்று ஆசை, என் மனைவிக்கோ ஆண் குழந்தை வேண்டும். குழந்தை இல்லை என்கிற வெறுமை கூட இப்படிச் சண்டை போட்டுக்கொள்வதில் தெரிவதில்லை. சண்டையின் இறுதியில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை என்று சமரசம் செய்துகொள்வோம். எங்கள் இருவருக்கும் நன்றாகவேத் தெரியும் என்ன குழந்தை என்பதை நாம் தீர்மானிக்க முடியாதென்று. இருந்தும், இப்படி ஒரு விளையாட்டுச் சண்டை எங்கள் பொழுதுபோக்குகளில் ஒன்று.

எங்கள் வீடு விருதுநகர் கீழக்கடை தெருவில் உள்ளது. நான் மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணியாற்றுகிறேன். தினமும் திருநெல்வேலியிருந்து வரும் பயணிகள் இரயிலில் மதுரை செல்வேன். இன்று சைக்கிளில் இரயில் நிலையம் செல்லும் முன் மாரியம்மன் கோவில் சென்றேன். சாமி கும்பிடும் பொழுது மனதிற்குள் ‘நீயே எங்கள் வீட்டில் மகளாக வந்து பிறக்க வேண்டும் தாயே!’ என்று வேண்டினேன். பின்பு கோவிலின் அருகேயுள்ள ஒரு கடையில் இனிப்புகள் வாங்கினேன். இரயிலில் வரும் சக பயணிகள் சிலர் காலப்போக்கில் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். ஒருவர் ஓய்வு பெற்ற ஆசிரியர், ஒரு வழக்கறிஞர் மற்றும் இரண்டு மெக்கானிக்குகள். ஆசிரியர் இப்பொழுது மதுரையில் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் மகன் பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கிறான். அவருக்கும் பல வருடங்கள் கழித்து குழந்தை பிறந்தது. மற்ற மூவரும் என்னை விட வயதில் சிறியவர்கள், திருமணமாகாதவர்கள்.

சைக்கிளை ஸ்டாண்டில் நிறுத்தும் பொழுதே இரயில் வந்துவிட்டது. அவசரமாக ஓடிச் சென்று ஓடும் இரயிலில் ஏறிக்கொண்டேன். பல முறை ஓடும் இரயிலில் ஏறியுள்ளேன். ஆனால் என்றும் இல்லாத பயம் இன்று என்னை தொற்றிக்கொண்டது. என்னை நம்பி இப்பொழுது இரண்டு உயிர்கள் உள்ளன, இனி இப்படி கவனக் குறைவாக இருக்ககூடாது. நாளை முதல் நேரத்திற்கு இரயில் நிலையம் வந்துவிட வேண்டும். நண்பர்கள் நால்வரும் வழக்கமான இடத்தில் தான் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினேன். அனைவரும் விஷயம் அறிந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். வழக்கறிஞர், “இனிப்புகள் மட்டும் கொடுத்து ஏமாற்றக்கூடாது, ஹோட்டல் சென்று பரோட்டா சாப்பிட வேண்டும்.” என்றார். மெக்கானிக்குகள் இருவரும் “சரக்கு” வேண்டும் என்றார்கள். ஆசிரியர் அவர்கள் மூவரையும் சத்தம் போட்டார், “வெயில் சார், இனிமேல் தான் உங்களுக்கு நிறைய செலவுகள் வரும். இதில் எங்களுக்காக வேறு நீங்கள் செலவு செய்ய வேண்டாம். இனிப்புகளுக்கு நன்றி, இதுவும் கூட நீங்கள் குழந்தை பிறந்த பிறகே கொடுத்திருக்கலாம். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.” என்றார்.

அன்றைய தினம் அருமையாகச் சென்றது. இரண்டு பெரிய ஆர்டர் கிடைத்தது. வழக்கத்தை விட அதிக முறை அகல்யாவிற்கு போன் செய்து பேசினேன். இரவு இரயிலுக்காக மதுரை இரயில் நிலையத்தில் காத்திருந்தேன். ஆசிரியர் தான் முதலில் வந்தார். வந்தவர் என்னிடம் நேரடியாக, “பாருங்க வெயில் சார், நான் சொல்றத தப்பா நினைக்க வேண்டாம். காலையிலேயே சொல்லியிருப்பேன், அனைவருக்கும் முன் வேண்டாம் என்று நினைத்தேன். எனக்குத் திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் கழித்து என் மனைவி ஒரு முறை கர்ப்பமானாள். நானும் மகிழ்ச்சியில் நீங்கள் இன்று காலை செய்ததை போல இனிப்புகள் வழங்கினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான்கு மாதங்களில் அந்த கருக் கலைந்தது. எல்லோருக்கும் ரொம்பக் கஷ்டமாக இருந்தது. குழந்தை பிறக்கும் வரை நீங்களும், உங்கள் மனைவியும் கவனமாக இருக்க வேண்டும். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இனிப்புகளோ, விருந்தோ, மருந்தோ, குழந்தை பிறந்த பிறகே வைத்துக்கொள்வோமே.” என்றார். அவர் பேசி முடித்த கணம், சிறிது தூரத்தில் வழக்கறிஞர் வந்துகொண்டிருந்தார்.

ஆசிரியர் சொன்ன விஷயம் சரி என்றே தோன்றியது. அதற்கு மேல் நாங்கள் எதுவும் பேசவில்லை. இரயிலில் ஏறி அமர்ந்தோம். சிறிது நேரத்தில் கண் பார்வையிழந்த ஒரு பெண் குழந்தையும், தந்தையும் பிச்சை கேட்டுப் பாடிவந்தனர். ‘தாய் தந்த பிச்சையில்’ என்ற அந்தப் பாடல் வரிகள் அவ்வளவு சோகம் நிறைந்ததா என்று அவர்கள் பாடும் போது தான் தெரிந்தது. நாங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் எதிர்புறம் ஒரு மனநலம் குன்றிய சிறுவனும் அவன் பெற்றோர்களும் வந்து அமர்ந்தனர். ஒரு மணி நேர இரயில் பயணத்தில் அவன் நடவடிக்கைகளை பார்க்கும் போதே அது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது. வெறும் ஒரு மணி நேரம் தான், எனக்கு அந்தச் சிறுவன் எந்த உறவும் இல்லை; எனக்கே இவ்வளவு வேதனையாக இருந்தால், வாழ்நாள் முழுவதும் தன் ஆசைக் குழந்தையை இப்படிப் பார்க்க நேரும் பெற்றோர்களின் நிலையை எண்ணி என் கண்கள் கலங்கின. இரயில் விருதுநகர் வந்து சேர்ந்தது. நாங்கள் ஐவரும் ஆளுக்கொரு ஒரு பக்கம் பிரிந்து சென்றோம். சைக்கிள் ஸ்டாண்டில் என் சைக்கிளை தேடி எடுக்க இரண்டு நிமிடம் ஆனது. அகல்யாவிற்கு பிடித்த பால் கோவா வாங்கலாம் என்று நினைத்தேன்; இந்நேரம் அவள் அதை சாப்பிடக்கூடாது என்பதால் வாங்கவில்லை.

வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றும் போதே இன்றைய நிகழ்வுகளையும் சேர்த்து வெளியே விட்டு வந்தேன். புன்னகையுடன் வீட்டிற்குள் நுழைந்தேன். காலையில் அவசரமாகக் குளித்ததால், முதலில் நன்கு குளித்துவிட்டு வந்தேன். அம்மாவின் கையிலிருந்த தோசைக் கரண்டியை பறித்தேன். அம்மா சிரித்துக்கொண்டே என்னை சத்தம் போட்டாள். அம்மாவிற்கும், அகல்யாவிற்கும் தோசை வார்த்துக் கொடுத்தேன். அவர்கள் போதும் என்று சொல்லும் வரை விடவில்லை. பின்பு நான் தோசை சாப்பிட்டேன். காலை சீக்கிரமாக விழித்ததால், இரவு நேரத்தோடு தூங்கினோம்.

மறுநாள் அதிகாலை வெயிலுகந்தம்மன் கோவிலின் கர்பக்ரஹம் அருகேயுள்ள பிள்ளைத்தாச்சியம்மன் பாதங்களில் சிறிது நல்லெண்ணெய் தடவி வணங்கினேன். ‘தாயே! என்ன குழந்தையாக இருந்தாலும் நல்லபடியாக, நல்ல ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும். தாயும் சேயும் நலமுடன் இருக்க வேண்டும்.’

—–

– எழுத்தாளர் சீயான்

Comments are closed, but trackbacks and pingbacks are open.