சிறுகதை – எண்ணை பரோட்டா

விருதுநகர் சந்திக்கூடத் தெருவில் ஒரு அழகிய சிறிய வீடு எங்களுடையது. வெளிச்சுவற்றில் அரை சதுரடி கருங்கல்லில் இராசலட்சுமி இல்லம் என்று எழுதியிருக்கும். ஐந்து நாட்களாக எங்கள் வீட்டின் முன் மாக்கோலம் இடவில்லை. அன்றிரவு நான் அம்மாவிற்கு கேப்பை அடை சுட்டுக்கொண்டிருந்தேன். முதல் அடையை தட்டில் பரிமாறினேன். தொட்டுக்கொள்ள சிறிது கொத்தமல்லி துவையல் செய்திருந்தேன். கட்டிலில் அமர்ந்தபடியே அம்மா சாப்பிடத் துவங்கினாள். ஒரு வாய் சாப்பிட்டதும், “நீ சுடும் அடுத்த அடையுடன் எனக்குப் போதும்” என்றாள்.

அடை நன்றாகத்தான் வந்திருந்தது. துகையலும் கூட அம்மாவிற்கு பிடித்த மாதிரி மிக்சியில் இல்லாமல் அம்மியிலே அரைத்தது தான். நான் ருசி பார்த்த போது, உப்பு, புளி, காரம் எல்லாம் அம்மாவிற்கான பக்குவத்தில் தான் இருந்தது. “ஏம்மா, நல்லா இல்லையா?” என்றேன். “இல்லடா, எனக்கு பசி இல்லை.”

இரண்டாவது அடையில் ஒரு சிறிய பச்சை மிளகாய்த் துண்டு இருந்தது. அதை விடுத்து சாப்பிடும்படி அம்மாவிடம் சொன்னேன். அம்மா வேண்டா வெறுப்பாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். மெதுவாக, “தம்பி” என்றாள். ஏதோ சங்கடம் என்று நினைத்து அவளருகே விரைந்து வந்து என்னவென்றுக் கேட்டேன்.

அம்மா, “எனக்கு அல்லா பிச்சை கடையில் எண்ணை பரோட்டா வாங்கித்தா.” என்றாள்.

அம்மா நான்கு நாட்கள் முன்பு தான் ஒரு இருதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டாள். எனக்கு விவரம் தெரிந்த வரையில் அம்மா எப்பொழுதுமே தனக்காக எதுவும் கேட்டதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவளுக்கு என்ன பிடிக்கும் என்று கூட எனக்குத் தெரியாது. அய்யா பல முறை பரோட்டா வாங்கி வந்த பொழுது, அவளுக்கு இருக்கிறது என்று பொய் சொல்லியே என்னை முழுவதுமாக சாப்பிட வைத்திருக்கிறாள். அம்மாவிற்கு அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர், அவள் கொழுப்புச் சத்து குறைந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்று கூறியிருந்தார். எண்ணையில் பொரித்த உணவு வகைகள் அறவே கூடாது என்றிருந்தார். இத்தனை ஆண்டுகள் கழித்து அம்மாவிற்கு பிடித்த உணவைத் தெரிந்துகொண்டு, அதை அவளுக்கு தர முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. இதில் இன்னும் கொடுமையானது என்னவென்றால், நான் ஒரு சமையல் கலை நிபுணர். சிங்கப்பூரில், பல வாடிக்கையாளர்கள் நான் செய்த எண்ணை பரோட்டாவைப் பாராட்டியுள்ளனர். “அடுத்த வாரம் வாங்கலாம்மா.” என்று சொல்லி முடிப்பதற்குள் வாசலில் “அம்மா!” என்ற சத்தம் கேட்டது.

திவ்யா அக்கா, எங்கள் பக்கத்துக்கு வீட்டில் இருந்தாள். இப்பொழுது திருமணமாகி மதுரையில் இருக்கிறாள். என்னை விட ஒரு வயது மூத்தவள். ஆனால் பள்ளியில் ஒரு வருடம் தேர்ச்சி பெறாததால், நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் படித்தோம்; வெவ்வேறு பள்ளிகளில். நான்கு வருடங்களில் ஆளே மாறிப்போயிருந்தாள். பள்ளியில் அவள் மிகச் சிறந்த கூடைப்பந்து வீராங்கனை. நான் அவளை உள்ளே வாருங்கள் என்று சொல்லும் முன்பே, உரிமையுடன் வீட்டிற்குள் வந்தாள்.

“என்னடா, இப்படி எளைச்சு போயிட்டே! அம்மாவுக்கு இப்ப எப்படி இருக்கு?” “அம்மா, நானும் மதுரையில் தான இருக்கேன்? ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா? நான் வந்து உங்க கூட இருந்திருப்பேன். அவர் என்னை சத்தம்போட்டார்.” என்று படபடவெனெப் பேசினாள். அம்மாவிற்கு அறுவை சிகிச்சை நடந்தது மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில்.
“உனக்கு எதுக்கு சிரமம்?” என்றாள் அம்மா.
“நல்லா இருக்கே கதை, என் அம்மாவாக இருந்தால் நான் பார்க்கமாட்டேனா? அது மாதிரி தான்.” “இவன் ஏன் இப்படி தேவாங்கு மாதிரி இருக்கான்?” என்றாள் என்னைப் பார்த்து.
“அப்போ உன்னை மாதிரி உருண்டையாக இருக்கனுமா?” என்றாள் அம்மா சிரித்துக்கொண்டே. அம்மா எப்பொழுதும் என்னை விட்டுக்கொடுக்கமாட்டாள்.
“போங்கம்மா, இவனுக்கு சீக்கிரமா ஒரு கல்யாணத்தை செய்யணும்.”
“அதைச் சொல்லு, இவன் உன்னை மாதிரி ஒரு பெண் பிள்ளையாக இருந்திருந்தால் நானும் இந்நேரம் பேரன் பேத்திகளைப் பார்த்து சந்தோஷமாக கண்ணை மூடியிருப்பேன்.”
“ஏன்ம்மா, நல்ல வெள்ளிக்கிழமை அதுவுமா! நான் ஒரு நல்ல பெண்ணாகப் பார்க்கிறேன்.” “என்னடா சிங்கப்பூரில் ஏதாவது ஒரு சிங்காரியை ஏற்கனவே பார்த்துட்டியா?”
“என்னத்த சிங்கப்பூர், அவன் வேலையை விட்டு தான் இப்போ இங்கே இருக்கான். அது மட்டுமா, அவன் கல்யாணத்துக்கு சேர்த்து வைத்தது எல்லாம் என் மருத்துவ செலவுக்கே சரியாபோச்சு.” சொல்லும்போதே அம்மாவின் குரல் உடைந்தது, கண்கள் கலங்கின.
“அம்மா!” என்றேன் அதட்டலாக. “அக்கா, அம்மா ஓய்வு எடுக்கணும், அதிகம் பேசக்கூடாது.”
“சரிம்மா, நான் இன்னும் இரண்டு நாட்கள் இங்கு தான் இருப்பேன். வரேன்.”
திவ்யா அக்கா செல்லும் முன் வாசலில் என்னிடம் மெதுவாகச் சொன்னாள், “என்ன உதவி வேண்டுமென்றாலும் தயங்காமல் கேள். பணம் தேவை என்றால், நான் மச்சானிடம் சொல்கிறேன். அவரும் உன்னிடம் பேசுவார்.”

அக்கா கிளம்பும் சமையம் தான் ஞாபகம் வந்தது. சிங்கப்பூரில் இருந்து, தம்பிக்கு வாங்கிய ரிமோட் கார் மற்றும் பாப்பாவுக்கு வாங்கிய பாப்பா பொம்மையை தந்தேன். எதற்கு வீண் செலவு என்று வாங்க மறுத்தாள். நான் வற்புறுத்தி அவள் கையில் கொடுத்தேன். சந்தோஷமாக வாங்கிக்கொண்டாள்.

உள்ளே வந்து அம்மா கட்டில் அருகே தரையில் அமர்ந்தேன். சேமித்து வைத்த பணம் இன்னும் கொஞ்சம் இருக்கிறது என்று அம்மாவிடம் பொய் சொன்னேன். அந்த மீதி பணத்தில் ஒரு சிறிய ஓட்டல் ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னேன். நமது ஊரில் நம்பி முதலீடு செய்யக்கூடிய ஒரு தொழில் இது. நிச்சயம் நல்ல பெயர் வாங்கி, ஓட்டலை நன்கு முன்னேற்றலாம் என்றேன். நான் சமையல் கலைக் கல்லூரியில் படிக்க அய்யா பெரிதும் எதிர்ப்பு தெரிவித்தார். அம்மா தான் அவரைச் சமாதானம் செய்து, சம்மதிக்கவும் வைத்தாள். நான் சந்தோஷமாக இருக்க வேண்டும், அதற்கு மனதுக்கு பிடித்ததைத் தான் படிக்க வேண்டும் என்றாள் பள்ளிபடிப்பை கூட முழுவதும் முடிக்காத என் அம்மா. இந்த நிமிடம், அம்மா நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பது தான் என் முதல் வேண்டுதலாக இருந்தது. எனது எதிர்காலம் நிச்சயம் நல்லபடியாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. அம்மாவிடம் நாளை காலை என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்டேன். அவள் எதுவென்றாலும் சரி என்று சொல்வாள் என்று எதிர்பார்த்தேன். அதையே அவளும் சொன்னாள். கம்பு சப்பாத்தியும், கொங்கு நாட்டு தக்காளி குழம்பும் வைக்கவா என்றேன். அரை மனதுடன் சரி என்று தலையை ஆட்டினாள். அய்யா வர நேரமாகும் என்று அம்மாவை சீக்கிரம் தூங்கச் சொன்னேன். தினமும் அய்யா வரும் வரை அம்மா விழித்துக்கொண்டிருப்பாள். அவர் வந்து சாப்பிட்ட பிறகு தான் இவள் சாப்பிடுவாள். அய்யாவை இனிமேல் தினமும் வீட்டுக்கு சீக்கிரம் வரவேண்டுமென்றுச் சொன்னேன். அம்மாவை, அய்யாவுக்காக காத்திருக்க வேண்டாம் என்றும் சொன்னேன். இரண்டு பேரும் நான் சொன்னதைக் கேட்கவில்லை. நேற்று இரவு பத்து மணிக்கு அய்யா வந்தார். அதன் பின்பு தான் அம்மா தூங்கினாள். நான் கட்டாயப்படுத்தியதால், முன்பே சாப்பிட்டுவிட்டாள்.

இரவு 9 மணி. அய்யா இன்னும் வரவில்லை. அம்மாவை அவர்கள் அறையில் தூங்கச் சொன்னேன். முதலில் தூக்கம் வரவில்லை என்று சொன்னவள் பின்பு அவளே சென்று படுத்துக்கொண்டாள். அம்மாவுக்கு போர்த்திவிட்டேன். விளக்கை அணைக்க வேண்டாம் என்றாள்.
“அய்யா வந்ததும், சாப்பாடு எடுத்து வை. மறக்காமல் அவர் குடிக்க தண்ணீரும் வை. அப்புறம், அவர் இரவு மாத்திரையை மறந்து விடுவார். அதையும் ஞாபகப்படுத்த வேண்டும்.”
“சரிம்மா, நான் பார்த்துக்கிறேன்.”
“முடிஞ்சா, அய்யாவை வரும் பொழுது எண்ணை பரோட்டா வாங்கச் சொல். நீ தான் வாங்கித் தரமாட்டேன்னு சொல்லிட்டே!” என்று சொல்லி சிரித்தாள். நானும் சிரித்தேன்.

நான் பாத்திரங்களை கழுவத் தொடங்கினேன். சிறிது நேரத்தில் வேலை முடிந்தது. தொலைக்காட்சியில் வெளிநாட்டில் வாழும் தமிழர்களைப் பற்றிய ஒரு உரையாடலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அய்யா வருவதற்கு முன்பாகவே அம்மா தூங்கிப்போனாள். எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. பின்பு அய்யா வந்ததும், இருவரும் ஒன்றாராக அமர்ந்து சாப்பிட்டோம். அய்யா பொதுவாக என்னிடம் அதிகம் பேசமாட்டார். அந்த இரவு ஒரு விதி விலக்கு. அய்யா இரண்டு வாய் சாப்பிட்டதும் விக்கல் வந்தது. நான் தண்ணீர் எடுக்க மறந்துவிட்டேன். பின்பு விரைந்து எடுத்துக் கொடுத்தேன். விக்கல் விட்டபாடில்லை. அம்மா தூங்கிய பின்பும் தன்னையே நினைப்பதாகவும், அதனால் தான் விக்கல் எடுக்கிறது என்றும் கேலியாகச் சொன்னார். பின்பு அவர் அம்மாவைப் பெண்பார்த்தது, திருமணம், கூட்டுக்குடும்பம், எனக்கு ஒரு அக்கா இறந்து பிறந்தது, நான் பிறந்தது, வளர்ந்தது என்று இரவு ஒரு மணிவரை சாப்பிட்ட கை கழுவாமல் பேசிக்கொண்டிருந்தோம். அம்மா கிடைத்ததற்கு நாங்கள் இருவருமே கொடுத்துவைத்தவர்கள் என்றார்.

அம்மா-அய்யா அறையில் விளக்கை அணைத்துவிட்டு நான் தூங்கினேன். காலை 5 மணிக்கு சமையல் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன். அம்மா கட்டிலில் தூங்க, அருகில் அய்யா தரையில் நன்கு குறட்டை விட்டபடி தூங்கிக்கொண்டிருந்தார். அம்மாவைப் பார்த்தபோது ஏதோ மனதிற்கு சரியாகப் படவில்லை. நேற்று இரவு அய்யா வரும் முன்பு தூங்கிய அதே நிலையில் அப்படியே இருந்தாள். இரவு விளக்கை அணைத்தபோதும் கூட அசைந்த அறிகுறிகள் இல்லாமல் அதே நிலையிலேயே இருந்தாள். மெல்ல அருகில் சென்று அவளை அழைத்தேன். சிறிது சத்தமாக கூப்பிட, அய்யா விழித்துக்கொண்டார். அம்மாவை எழுப்ப அய்யா அவள் கைகளைத் தொட்டார். அந்தக் கணம் அவர் முகம் மாறியது. அம்மா மூக்கின் அருகே தன் புறங்கையை வைத்துப்பார்த்தார். மறுநிமிடம் ஓவென்று அழத்துவங்கினார். என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. நடப்பவை எதுவும் உண்மை இல்லை என்றே தோன்றியது. இதோ இப்பொழுது அம்மா எழுந்துவிடப்போகிறாள் என்று நம்பினேன், ஆனால் அது நடக்கப்போவதில்லை. என்னையும் அறியாமல் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகியது. மண்டைக்குள் ஏதோ சத்தங்கள் கேட்டன. உலகமே இருட்டியதைப் போல உணர்ந்தேன்; மயங்கி விழுந்தேன்.

—–

“ஏங்க!”
“என்னங்க!”
“என்னங்க, என்ன பண்றீங்க? என்ன பகல்லேயே தூக்கம்? நீங்க தான் பரோட்டா சாப்பிடமாட்டீங்க, பாப்பாவுக்கு பிச்சு குடுக்கலாம்ல.”
“ம்ம், நேற்று இரவு வேலை அதிகம்ல அதான் கொஞ்சம் தூங்கிட்டேன்.” மெதுவாக சோம்பல் முறித்தேன். தலை வலித்தது, கனத்தது.
“சீக்கிரம்ங்க, நாளைக்கு ஆயுத பூஜை. ஓட்டல்ல நிறைய வேலை இருக்கு.”
“ம்ம், பார்த்துக்கலாம்.” “ராஜிக்குட்டி! என் அம்மா, இங்க வாங்க. பாப்பாக்கு என்ன வேணும்? எண்ணை பரோட்டாவா? வாட்டு பரோட்டாவா?”
“எண்ணை பரோட்டா.”

என் கண்களில் கண்ணீர், இதழில் சிறு புன்னகை.

—–

– எழுத்தாளர் சீயான்

Comments are closed, but trackbacks and pingbacks are open.