சிறுகதை – இரயில்வே கடப்பு

“டாடி இளையராஜா பாட்டு வேண்டாம்.” என்றாள் என் செல்ல மகள் மின்னல்.

“அப்பாவுக்கு இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும் செல்லம். சரி, நீயே சொல்லு என்ன பாட்டு வேணும்?”

“கத்தி! இல்லேனா துப்பாக்கி!” என்று முந்திக்கொண்டு வந்தான் என் இளைய மகன் அமுதன்.

“ச்சை! நல்ல அப்பா, நல்ல தம்பி! அமு நீ இனிமேல் வீடியோ கேம்ஸ் விளையாடக் கூடாது, குறிப்பா GTA IV. கத்தியாம், துப்பாக்கியாம்!”

என் பிள்ளைகள் இருவருக்கும் பிடித்த சிசமி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை காரில் உள்ள தொலைக்காட்சியில் போட்டேன். இருவரும் பின் இருக்கையில் அமர்ந்தபடியே அதைப் பார்க்கத் துவங்கினர். அமெரிக்கா செல்லும் முன் அவர்கள் அந்த நாட்டுக் கலாசாரத்தையும், அந்த நாட்டு பிள்ளைகளின் பேச்சு முறையும், வாழ்க்கை முறையும் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்று நினைத்து இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்திருந்தேன். காலப்போக்கில் அவர்களுக்கும் அது பிடித்துவிட்டது. அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. எங்கள் வீடு வருவாய்த் துறை அலுவலகம் அருகே கச்சேரி சாலையில் உள்ளது. பிள்ளைகள் படிக்கும் பள்ளியோ அரசு மருத்துவமனை அருகில் இருக்கிறது. பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது எனக்குப் பிடித்த வேலைகளில் ஒன்று. பள்ளி வாசலில் நின்று அவர்கள் கையை அசைத்து டாட்டா சொல்லும் அழகை தினம் தினம் பார்த்தாலும் அலுப்பதில்லை.

பல நாட்களில் காலை மாலை இரு வேளைகளும் வழியில் இருக்கும் ஒரு இரயில்வே கடப்பு அடைத்திருக்கும். இன்றும் அப்படித்தான். காரின் முன்னே ஒரு ஆம்புலன்ஸ் நின்றுகொண்டிருந்தது. அந்த சைரென் சத்தம், என் திடமான வோக்ஸ்வேகன் கார் கதவுகளையும் ஜன்னல்களையும் தாண்டி இலேசாகக் கேட்டது; சிசமி ஸ்ட்ரீட் வேறு ஓடிக்கொண்டிருந்தது. பதானி ஆடை அணிந்த மூன்று இசுலாமிய இளைஞர்கள் ஆம்புலன்ஸ் அருகே நின்றுகொண்டிருந்தனர். அதில் ஒருவர் அவசரமாக அந்த இரயில்வே கடப்பை நோக்கி ஓடினார். மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டார். அங்கே உள்ள கேட்டைத் திறந்து மூடும் நபருடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று அவர் காலில் விழுந்தார். ஆம்புலன்ஸ் அருகே இருந்த மற்ற இரண்டு நபர்கள் அந்த முதல் நபரை நோக்கி ஓடினர். அந்த முதல் நபரை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து வந்தனர். அந்த முதல் நபர் தேம்பி அழுதுகொண்டிருந்தார். அவரை இப்பொழுது தான் எனக்கு அடையாளம் தெரிந்தது. எங்கள் வீட்டில் அனைவரும் மெயின் பஜாரில் ஒரு கடையில் தான் வாடிக்கையாகக் காலணிகள் வாங்குவோம். நான் பார்த்தவர் அந்தக் கடையில் இருக்கும் ரியாஸ் பாயின் மகன் சாதிக்.

என் பிள்ளைகளை காரை விட்டு இறங்க வேண்டாமென்று சொன்னேன். ஒரு ஜன்னலை மட்டும் பொத்தானைத் தட்டி சிறிது கீழே இறக்கினேன். ஆம்புலன்ஸ் சத்தம் இப்போது அலறியது. காரை விட்டு கீழே இறங்கிக் கதவைச் சாத்தினேன். மெல்ல ஆம்புலன்ஸ் அருகேச் சென்றேன். சாதிக் நான் காரை விட்டு இறங்கியதைப் இந்நேரம் பார்த்துவிட்டார். எனதருகே ஓடி வந்து என்னை இறுகக் கட்டி தழுவிக்கொண்டார். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் உடல் நடுங்கியது, அதிகம் ஏங்கி மூச்சு வாங்கி அழுதுகொண்டிருந்தார்.

அழுதுகொண்டே, “அண்ணாச்சி, கேட்ட திறக்க மாட்டேங்குறாங்க. நீங்க சொல்லுங்க. கண்டிப்பா திறப்பாங்க. வாப்…பா… வாப்பா… என்னால முடியல… …ணாச்சி.” என்றார்.

அவரைத் தட்டிகொடுத்து கொஞ்சம் ஆறுதல் படுத்தினேன். அருகில் இருந்தவரிடம் விசாரித்தேன். ரியாஸ் பாய்க்கு திடீரென்று மூச்சுக் திணறல் ஏற்பட்டு வீட்டின் அருகே ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர், அவர் தந்தை மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளார் என்றும் உடனே அரசு மருத்துவமனை செல்ல வேண்டுமென்றும் கூறியுள்ளார். அவர்கள் வரும் வழியில் இந்த இரயில்வே கடப்பு அடைத்துள்ளது. கேட்டைத் திறப்பவர் கண்டிப்பாக இரயில் சென்ற பிறகு தான் திறக்க முடியும் என்று கூறியுள்ளார். நான் அவர்களிடம் இரயில்வே கடப்பின் நாங்கள் இருக்கும் இந்தப் பக்கம் ஏதாவது ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்றேன். அருகில் இருந்தவர் சொன்னார் அவர்களுக்கு அந்த அளவு வசதி இல்லை என்று, அதனால் அரசு மருத்துவமனை தான் செல்ல வேண்டும் என்றார்கள். நான் பணம் தருவதாகச் சொன்னேன். நீங்கள் உங்களால் முடியும் பொழுது மெதுவாக வட்டியில்லாமல் திருப்பிக் கொடுங்கள் என்று சொன்னேன். சாதிக் என் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டார். அவரால் ஏதும் பேச முடியவில்லை. இந்நேரம் அந்த ஆம்புலன்ஸ்ஸைச் சுற்றி நிறைய வண்டிகள் நின்றன. நான் முதலில் என் காரை ஆம்புலன்ஸ் செல்வதற்கு இடம் கொடுத்துச் சற்று ஓரமாக நிறுத்தினேன். ஆம்புலன்ஸ்ஸை திருப்புவதற்குள் ஒரு சரக்கு இரயில் அவ்வழியே வந்தது. இந்நேரம் இந்த ஒரு ரயில் தான் கடந்து செல்லும் போல. அவர் குடும்பத்தினர் மனம் மாறினர். இரயில் இப்பொழுது சென்று விடும், அவர்கள் அரசு மருத்துவமனையே செல்வதாகச் சொன்னார்கள். நான் மீண்டும் ஒரு முறைக் கூறினேன், ஆனால் அவர்கள் அரசு மருத்துவமனை செல்வதில் உறுதியாக இருந்தனர்.

இப்பொழுது தான் நான் அந்த ஆம்புலன்ஸ்ஸிற்கு உள்ளே பார்த்தேன். ரியாஸ் பாய் அங்கே ஆக்ஸிஜன் முகமூடி அணிந்து படுத்துக் கொண்டிருந்தார். சில வாரங்களுக்கு முன்பு கூட அவரைப் பார்த்தேன். இன்று ஏனோ மிகவும் வயது முதிர்ந்தவரைப் போல தோற்றமளித்தார். என்னைப் பார்த்ததும் மெதுவாக சலாம் வைத்தார். முகமூடியின் பின்னே அவரது வழக்கமான புன்னகை தெரிந்தது. நானும் பதிலுக்கு சலாம் வைத்தேன். சலாம் வைக்க அவர் தலையை லேசாக தலையணையிலிருந்து உயர்த்தி இருந்தார். அடுத்தக் கணம் அவர் சலாம் வைக்க உயர்த்திய கையும் தலையும் ஒரு சேரக் கீழே விழுந்தன. அவர் வாய் லேசாக திறந்தபடி இருந்தது. கண்கள் நான் இருக்கும் திசையில் பார்த்தன, ஆனால் என்னையும் ஊடுருவிச் சென்றது அந்தப் பார்வை. இமைகள் சிமிட்டவே இல்லை. அவ்வளவு கூட்ட நெரிசலில், அனைவரது கவனமும் இரயிலின் மீதே இருந்தது. தெற்கே சென்றுகொண்டிருந்த அந்த இரயில் இப்பொழுது தான் இரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியதால் மிக மெதுவாக ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது; 40 பெட்டிகளாவது இருந்திருக்கும் அதில். நான் அப்படியே உறைந்து போய் அங்கே நடுத் தெருவில் நின்று கொண்டிருந்தேன். என் பார்வையை என் வண்டியின் பக்கம் திருப்பினேன். என் மகன் காரின் முன் இருக்கைக்கு இப்போது வந்திருந்தான். அவன் கண்கள் தொலைக்காட்சியையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தன. என் மகளோ என்னையே கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் இருக்கும் இடத்தில் இருந்து ஆம்புலன்ஸில் இருக்கும் ரியாஸ் பாயைப் பார்க்க வாய்ப்பில்லை. அவள் முகம் ஒரு புரியாத புதிரைப் போல இருந்தது.

இரயிலின் கடைசிப் பெட்டி கடந்து சென்றது. அது பரிசோதகரின் பெட்டி. நான் சிறு வயதில் இருந்தே தனிமையை விரும்புபவன். எனது கனவு வேலை ஒரு சரக்கு இரயிலில் பரிசோதகராக இருப்பது தான். அது ஒவ்வொரு முறை சரக்கு இரயில் பரிசோதகரின் பெட்டியை பார்க்கும் பொழுதும் எனக்கு ஞாபகம் வரும். இரயில் கடந்து சென்று உடனேயே கேட்டை திறந்தார்கள். இருபக்கமிருந்தும் வண்டிகள் போட்டியிட்டுக்கொண்டு சென்றன. சாதிக் வண்டியில் ஏறப் போனார். நான் அவர் கைகளைப் பிடித்தேன். அவர் என்ன என்பது போல என்னை பார்த்தார். நான் வலது இடது புறமாக என் தலையை மெதுவாக ஆட்டினேன். உடனே அவர் தந்தையைப் பார்த்தார். அங்கேயே நடுச் சாலையில் மண்டியிட்டு “வாப்பா!” என்று அவர் தொண்டை நரம்பு புடைக்கக் கதறினார். அது இப்பொழுதும் என் காதில் ஒலிக்கிறது, அந்தக் காட்சியும் என் கண் முன்னே நிற்கிறது. வண்டிகள் அனைத்தும் கடந்து சென்றுவிட்டன. ஆம்புலன்ஸும் என் வண்டியும் தான் இப்போது அந்தச் சாலையின் நடுவே நின்றன. சாதிக் எதுவும் பேசாமல் ஆம்புலன்ஸில் ஏறி அமர்ந்தார். அவர் கூட வந்த இரண்டு இளைஞர்களும் கண் ஜாடையிலும், தலை அசைத்தும் விடைபெற்றுச் சென்றனர்.

நான் கார் உள்ளே சென்று அமர்ந்தேன். இறக்கிய ஜன்னலை முழுவதுமாக ஏற்றினேன். என் மகன் இன்னும் தொலைக்காட்சியையே பார்த்துக்கொண்டிருந்தான். என் மகள் “என்னப்பா?” என்றாள். “ஒன்னும் இல்லை செல்லம்!”.

பிள்ளைகளை பள்ளியில் இறக்கி விட்டேன். அன்று அவர்கள் டாட்டா சொன்னதை கூட என்னால் முழுவதுமாக ரசிக்க முடியவில்லை. நேராக குல்லூர்ச்சந்தைக்கு வண்டியை செலுத்தினேன். தொலைக்காட்சியை நிறுத்தினேன். பாடல்களும் போடவில்லை. வண்டியின் சத்தம் மட்டுமே கேட்டது. குல்லூர்ச்சந்தை அணை சாலையின் முடிவில் வண்டியை நிறுத்தினேன். இந்த மாதம் வெளிநாடுகளில் இருந்து பல விதமான நீர்ப் பறவைகள் இங்கே கூடும். வெளியே வந்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்தேன். சில காலம் இந்தப் பழக்கத்தை விட்டிருந்தேன். ஆனால் எப்பொழுதும் ஒரு பாக்கெட்டை காரில் வைத்திருப்பேன். ஊதக்காற்று வீசிக்கொண்டிருந்தது. காற்றில் ஒரு லேசான துர்நாற்றமும் கலந்திருந்தது. எனக்கு 36 வயது ஆகிறது, இது வரை என் கண் முன்னே ஒரு உயிர் பிரிவதை பார்த்ததில்லை. இன்று காலை நடந்த சம்பவம் என்னை வெகுவாகவே பாதித்திருந்தது. ரியாஸ் பாயின் கடைசிப் பார்வை என்னை இப்பொழுது கூட ஏதோ செய்தது.

எங்கள் குடும்பத் தொழில் இங்கே விருதுநகரில் உள்ளது. நான்கு தலைமுறைகளாக இதை செய்து வருகிறோம். என் அண்ணன் இது வரை விருதுநகரை விட்டு வெளியே வந்ததில்லை. நான் சிறு வயதில் அதிகம் சேட்டை செய்ததால் என்னை ஏற்காடு அனுப்பினார்கள். அது என் வாழ்கையை அப்படியே திருப்பிப்போட்டது. நான் ஏற்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் படித்தேன் . பின்பு சிவகாசியில் ஒரு கல்லூரியிலும் மேற்படிப்பை இலண்டனில் ஒரு பல்கலைக்கழகத்திலும் படித்தேன். என் தந்தையும் அண்ணனும் வற்புறுத்தியதால் இங்கே மீண்டும் வந்தேன். எனக்கு இந்த ஊர் மீது பற்றுதல் கிடையாது. இந்நிலையில் எனக்குத் திருமணம் முடிந்தது, இரண்டு குழந்தைகளும் பிறந்தனர். எனக்கும் அய்யா, அண்ணாவிற்கும் எதுவும் ஒத்துப்போகவில்லை. பின்பு அவர்களை மீறி சென்னையில் ஒரு வேலையில் சேர்ந்து சில காலம் கழித்து அமெரிக்கா சென்றேன். அங்கே இரண்டு வருடங்கள் வாழ்க்கை நிம்மதியாக இருந்தது. தீடிரென்று ஒரு நாள் இரவு இரண்டு மணிக்கு விருதுநகர் வீட்டிலிருந்து ஒரு கைபேசி அழைப்பு வந்தது; அய்யா தவறிவிட்டார் என்று. எவ்வளவோ முயற்சி செய்தும் இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் இந்தியா வர டிக்கெட் கிடைத்தது. நான் பிரான்க்ஃபுர்ட் வழியாக மும்பை வந்து மதுரை வந்து, அங்கிருந்து வீட்டிற்கு ஒரு டாக்சியில் வந்தேன். அய்யாவிற்கு சக்கரை வியாதி உள்ளதால், நான் வரும் முன்னரே அனைத்துக் காரியங்களும் முடிந்துவிட்டன. அம்மா ஒரு மாதம் முழுவதும் என்னிடம் பேசாமல் இருந்தாள்.

அதன் பின்னர் நான் விருதுநகரிலேயே தங்கிவிட்டேன். அண்ணனுக்கு இணக்கமாக தொழிலில் ஈடுபட்டேன். ஆனால் இன்று வரை தினமும் நான் அய்யாவிற்கு துரோகம் செய்துவிட்டதாக அவர் சொல்வார். நான் அதற்கு ஒரு போதும் அவரை எதிர்த்துப் பேசியதில்லை.

ரியாஸ் பாயை நான் சிறுவயதில் இருந்து அறிவேன். பழகுவதற்கு இனியவர். அவர் கடையில் வேலை பார்க்கும் சிறுவர்களிடமும் அன்பாகவே பேசுவார். எப்பொழுதும் புன்னகை பூத்த முகம். அவர் வருமானத்தில் இருபது சதவிகிதத்தைத் தேவை என்று வருபவர்களுக்கு கொடுத்து உதவுவார். சாதிக் நிக்காஹ்விற்கு அருமையான செம்மரியாட்டு பிரியாணி நானும் அண்ணனும் சாப்பிட்டோம். அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டப் பொழுதும் அதை அவர் எப்பொழுதும் வெளிக்காட்டியதில்லை. எனக்கு அய்யாவின் முகமும், ரியாஸ் பாயின் முகமும் மாறி மாறி ஞாபகம் வந்தது. கையில் இருந்த சிகரெட் கரைந்து கை விரலைச் சுட்டது. அதைக் காரில் இருந்த ஆஷ் ட்ரேயில் போட்டு, சீட்டில் அமர்ந்தேன்.

இன்று நடந்ததை எல்லாம் என் மனத்திரையில் ஒரு முறை திரும்பப் பார்த்தேன். இப்பொழுது நான் என்ன செய்வதென்று யோசித்தேன். வண்டியை எடுத்தேன், அந்த இரயில்வே கடப்பு வழியாகச் செல்ல மனமில்லாமல் வேறு ஒரு மேம்பாலம் வழியாகச் சுற்றிச் சென்றேன். வீட்டிற்குச் சென்றவுடன் நேரே என் கணிப்பொறியில் அமர்ந்தேன். நீங்கள் படிக்கும் இந்தச் சிறுகதையை எழுதினேன். என்னால் முடிந்தது இது தான். வரும் காலங்களில் இன்னொரு உயிர் அந்த இரயில்வே கடப்பில் பலியாகக் கூடாதென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

—–

– எழுத்தாளர் சீயான்

Comments are closed, but trackbacks and pingbacks are open.